தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி கோவையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், “வரும் தேர்தலில் எங்களுக்கான சீட்டுகளை திமுகவிடம் இருந்து கேட்டுப் பெறுவோம். சசிகலா வருகையால் அரசியலில் எந்த மாற்றமும் நிகழப் போவதில்லை. சசிகலா அதிமுக-வில் இணைய வேண்டுமென்று பாஜக வலியுறுத்துவதாக தகவல்கள் வருகின்றன. தங்கள் கட்சியில் யாரை சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பதை மற்றொரு கட்சி முடிவு செய்யும் நிலையில் தான் எம்ஜிஆர் தொடங்கிய அதிமுக உள்ளது. மூன்றாவது அணி அமைவது தமிழகத்துக்கு நல்லதல்ல.
மூன்றாவது அணியை காங்கிரஸ் விரும்பவில்லை. வெண்ணை திரண்டு வரும் போது பானையை உடைத்து விடக் கூடாது. கமல்ஹசனை திமுக கூட்டணிக்கு கொண்டுவர முயற்சி செய்யவில்லை. அதேசமயம் கமல்ஹாசன் திமுக கூட்டணிக்குள் வருவதற்கு வரவேற்கிறோம். கமல்ஹாசனால் திமுக கூட்டணியின் ஓட்டுகள் பாதிக்கப்படாது. ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளிகளை நீதிமன்றம் விடுதலை செய்யட்டும் நீதிமன்றம் விடுதலை செய்தால் அதை காங்கிரஸ் எதிர்க்காது, அதை ஏற்றுக் கொள்வோம்” என்றார்.