சென்னை கீழ்பாக்கத்தை சேர்ந்தவர் ஜோசப் (48) இவர் மருந்து பொருட்கள் ஏற்றுமதி செய்யும் நிறுவனம் நடத்தி வந்தார். இவர் தனது தொழில் சம்பந்தமான தகவல்களை தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டு வந்தார். அந்த பதிவுகளைப் பார்த்த லண்டனை சேர்ந்த எலிசபெத் என்ற பெண் தான் லண்டனில் மருந்து பொருட்கள் விற்பனை நிலையம் வைத்துள்ளதாக கூறி ஜோசப்புடன் அறிமுகமானார்.
மும்பையில் புற்றுநோய்கான ஒரு மருந்து ரூபாய் 40 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும், அதை வாங்கி தனக்கு அனுப்பினால் ரூபாய் 2 லட்சம் கமிஷன் தருவதாகவும், லண்டன் பெண் ஜோசப்பிடம் கூறியுள்ளார். அந்த மருந்தை விற்பனை செய்யும் மும்பையை சேர்ந்த ஒரு பெண்ணின் முகவரியையும் கொடுத்துள்ளார் எலிசபெத். இதை நம்பிய ஜோசப், எலிசபெத் கூறிய மும்பை பெண்ணைத் தொடர்பு கொண்டு அவர் கூறியபடி மருந்துக்காக ரூபாய் 40 லட்சத்தை அனுப்பியுள்ளார். ஆனால் அந்த மும்பை பெண் உறுதியளித்தபடி மருந்து வராததால் அவரை தொடர்பு கொள்ள ஜோசப் முயற்சித்துள்ளார். பலமுறை முயற்சித்தும் அவரை தொடர்பு கொள்ள முடியாததால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
ஜோசப்பின் புகார் தொடர்பாக வழக்கு பதிவு செய்த சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தி மும்பையில் இருந்து பேசிய நபர் மோசடி செய்திருப்பதை உறுதிப்படுத்தினர். இதை தொடர்ந்து சென்னை காவல்துறையினர் மும்பை காவல்துறை உதவியுடன் நைஜீரிய நாட்டை சேர்ந்த கிருஸ்டோபர் வில்மர் என்ற வாலிபரை மும்மையில் கைது செய்தனர். இவர் தான் தொழிலதிபர் ஜோசப்புடன் பெண் போல லண்டன் மற்றும் மும்பையிலிருந்து பேசியது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இவர் இது போல நாடு முழுவதும் பல இடங்களில் பல கோடி ரூபாய் மோசடி செய்திருப்பதும் தெரிய வந்தது. இதை தொடர்ந்து நைஜீரிய வாலிபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.