காங்கிரஸ் கட்சியில் தேசியத் தலைவர் பொறுப்பில் இருந்த ராகுல்காந்தி கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் அக்கட்சியின் படுதோல்விக்குப் பின்பு தலைவர் பதவியில் இருந்து விலகினார். இதனைத் தொடர்ந்து சோனியா காந்தி இடைக்காலத் தலைவராக இருக்கிறார். இந்நிலையில் தான் சில மாநிலங்களில் நடந்த தேர்தலிலும், உள்ளாட்சியும் கூட காங்கிரஸ் பலவீனமானது. இதனைத் தொடர்ந்து கட்சியில் ஜனநாயக முறைப்படி உள்கட்சித் தேர்தல் நடத்த வேண்டும் எனக் குரல் எழுந்தது. இந்நிலையில் காங்கிரஸின் செயற்குழு கூட்டம் காணொலி வடிவில் நடந்தது.
அதில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் உள்பட பலர் கலந்துகொண்டார். இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தியாளர்கள் கே.சி.வேணுகோபால், ரந்தீப்சுர் ஆகியோர் கூறும்போது, ‘’வரும் ஆண்டில் தமிழகம் உள்பட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கிறது. அந்தத் தேர்தல் முடிந்தபின்னர் காங்கிரஸ் தலைவர் தேர்தல் நடத்தப்படும். இதேபோல் தலைவரை தேர்ந்தெடுத்தப்பின் செயற்குழுவுக்கும் தேர்தல் நடத்தப்படும்.’’என்றார். அதேநேரம் சட்டசபைத் தேர்தல் முடிந்தபின் மே 29 ஆம் தேதி தேர்தல் நடத்த வாய்ப்பு இருப்பதாகவும், அது தொடர்பில் முடிவெடுக்கும் அதிகாரத்தை இப்போதைய தேசியத் தலைவர் சோனியா காந்திக்கே கொடுத்திருப்பதாகவும் செயற்குழு முடிவெடுத்தது. இலவசமாக கரோனா தடுப்பூசி போட வேண்டும், மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட மூன்று தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.