கடந்த ஆண்டின் இறுதியில் சீனாவின் வுஹான் மாகாணத்தில் தோன்றி உலகெங்கிலும் பரவியுள்ள கொரோனா வைரஸ் பலரது வாழ்க்கையையே மாற்றி அமைத்துவிட்டது. இந்த கொடிய கொரோனா வைரஸிற்கு எதிரான தடுப்பு மருந்து இன்னும் முழுமையாக கண்டுபிடிக்கப்படாத நிலையில், தற்போது இங்கிலாந்தின் சில பகுதிகளில் கொரோனாவின் புதிய வகை ஒன்று பரவி வருவதாக கூறப்பட்டு வருகின்றது. உருமாற்றம் பெற்ற இந்த கொரோனா வைரஸ் அறிகுறிகளை இங்கிலாந்து சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.
இங்கிலாந்தில் உருமாற்றம் பெற்ற இந்த கொரோனா பரவ ஆரம்பித்ததும், அங்கு குழப்பம் மற்றும் பதற்றமும் அதிகரித்துள்ளது. இதுவரை கொரோனாவுக்கு எதிராக கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசிகள் பல கட்ட சோதனைகளைத் தாண்டி மனித சோதனைகளில் இருக்கும் நிலையில், கொரோனா வைரஸ் உருமாற்றம் பெற்று பரவி கொண்டு வருவது மக்களின் நம்பிக்கையை கெடுக்கும் வகையில் உள்ளது.

கொரோனா வைரஸ் மாற்றம்
பொதுவாக ஒரு வைரஸ் அதன் கூறுகளில் மாற்றம் பெற்று உருமாற்றம் அடைவது என்பது சாதாரணமான ஒன்று கிடையாது என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். அந்த வகையில் 2019 ஆம் ஆண்டு கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் இதுவரை 17 முறை தனது மரபியல் கூறுகளில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
புதிய வகை கொரோனாவின் புதிய பெயர்
இங்கிலாந்தில் சமீபத்தில் கண்டறியப்பட்ட இந்த புதிய வகை கொரோனா வைரஸ் வீரியமிக்கதுடன், ஏற்கனவே இருக்கும் கொரோவை விட 70 சதவீதம் மிக வேகமாக பரவக்கூடியதாக முதல் கட்ட ஆராய்ச்சியில் தெரிவித்துள்ளனர். “VUI 202012/01” என பெயரிடப்பட்ட புதிய வகை கொரோனா வைரஸ், தனது “ஸ்பைக்” புரதத்தில் ஒரு மரபணு மாற்றத்தை ஏற்படுத்தியது. இது தான் மக்கள் மத்தியில் மிக வேகமாக பரவுவ காரணமாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

புதிய கொரோனாவின் அறிகுறிகள்
கொரோனாவின் மூன்று பொதுவான அறிகுறிகளான காய்ச்சல், வறட்டு இருமல் மற்றும் சுவை மற்றும் வாசனை இழப்பு தவிர, மற்ற 7 அறிகுறிகளும் கொரோனா வைரஸின் புதிய அறிகுறியும் உள்ளன. அந்த அறிகுறிகள் பின்வருமாறு..சோர்வு, பசியின்மை , தலை வலி, வயிற்றுப்போக்கு, மனகுழப் பம், தசை வலி, சரும அரிப்பு அல்லது வெடிப்பு ஆகியவையாகும்.
மேலும் இதுகுறித்து கிங் கல்லூரி ஆராய்ச்சியாளர்கள் கூறியது , “உங்களுக்கு மேலே கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகள் தென்பட்டால், அசால்ட்டாக எடுத்து கொள்ளாமல் , நீங்களும், உங்கள் குடும்பத்தினரும் உடனடியாக தனிமைப்படுத்திக் கொள் வேண்டும், விரைவில் பரிசோதனையும் செய்து கொள்ள வேண்டியதும்அவசியம் என்று கூறியுள்ளனர்”
உருமாறிய புதிய கொரோனா வைரஸ் மிகவும் ஆபத்தானதா?
இதுவரை கண்காணித்தவரை, புதிய கோவிட் வைரஸ் முந்தைய வைரஸை விட 70 சதவீதம் அதிக தொற்றுநோயாக இருக்கின்றது. இது மிகவும் ஆபத்தானதாக இருக்கும் என்று அதிகாரிகள் நம்புகின்றனர். மேலும் பழைய கொரோனாவை காட்டிலும் புதிய கொரோனா ஒருவரை தாக்குவதற்கான அதிகமாக வாய்ப்பு உள்ளது. அதோடு புதிய கொரோனா வைரஸ் முந்தைய வைரஸ் விட மிகவும் வேகமாகவும், கடுமையாகவும் நோயெதிர்ப்பு மண்டலத்தை தாக்கக்கூடும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறினர்.