பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் கடந்த 2008 நவம்பர் மாதம் மும்பையில் திடீர் தாக்குதல் நடத்தினர். ஜடல் மார்க்கமாக வந்த பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு 166 பேர் பலியாயினர். இதில் அஜ்மல் கசாப் என்ற பயங்கவாதி மட்டும் சிக்கினான்.
அவனை இந்திய அரசு தூக்கில்போட்டது. மீதமுள்ள 9 பயங்கரவாதிகள் தப்பிவிட்டனர். இந்த தாக்குதலுக்கு நிதி திரட்டி, மூளையாக செயல்பட்டது லஷ்கர் இ தொய்பா மூத்த தலைவர் ஜாகியுர் ரஹ்மான் லக்வி (61) என்பது விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பான ஆதரங்களுடன் லக்வியை இந்தியாவிடம் ஒப்படைக்கும்படி பாகிஸ்தானிடம் கேட்கப்பட்டது. சர்வதேச நாடுகளின் அழுத்தம் காரணமாக 2009-ம் ஆண்டு பாகிஸ்தான் லக்வியை கைது செய்து சிறையில் அடைத்தது. கடந்த 2015-ம் ஆண்டு லக்வி வெளியே வந்தான்.

தனது மருத்துவமனை மூலம் வெளிநாடுகளில் இருந்து நிதி திரட்டி பயங்கரவாத செயல்களுக்கு வழங்கியது போன்ற குற்றச்சாட்டுகளில் லக்வியை பாகிஸ்தான் பயங்கரவாத தடுப்பு பிரிவு தேடிவந்தது. இதையடுத்து கடந்த 2-ம் தேதி லாகூரில் வைத்து கைது செய்யப்பட்டார் லக்வி. லாகூரில் உள்ள தீவிரவாத தடுப்பு நீதிமன்றம் வழக்கை விசாரித்து லக்வி-க்கு 15 ஆண்டு சிறைத்தண்டனை மற்றும் பாகிஸ்தான் மதிப்பில் 3-லட்சம் ரூபாய் அபராதமும் விதித்துள்ளது. இதையடுத்து லக்வி சிறையில் அடைக்கப்பட்டான். அவனது மருத்துவமனை அரசிடம் ஒப்படைக்கப்பட்டது.