டிசம்பர் 28 ஆம் தேதி கூட உள்ள மாநில சட்டசபை கூட்டத்தை முன்னிட்டு ”மத்திய பிரதேச மத சுதந்திர மசோதா 2020” (MP Freedon to Religion Bill) என்ற மசோதாவை மத்திய பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டம் நிறைவேற்றியுள்ளது.
நாங்கள் மத்திய பிரதேசத்தில் கட்டாய மதமாற்றத்தை அனுமதிக்க மாட்டோம். இந்த புதிய மசோதாவின்படி கட்டாய மதமாற்றம் செய்தால் 10 வருட சிறை தண்டனையும் ரூபாய் 50,000 அபராதமும் விதிக்கப்படும். 18 வயது பூர்த்தியடையாத பெண்களை கட்டாயமாக மதமாற்றம் செய்து, திருமணம் செய்து வைத்து பஞ்சாயத்து தேர்தல்களில் போட்டியிட வைக்கப்பட்டுள்ள நிறைய சம்பவங்கள் இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது, என மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.
18 வயது பூர்த்தியடையாத ஒரு பெண்ணை அல்லது பிற்படுத்தப்பட்ட அல்லது மலைவாழ் சமூகத்தை சார்ந்த ஒரு நபரை கட்டாயப்படுத்தி மத மாற்றம் செய்தால் அந்த நபருக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் ரூபாய் 50,000 அபராதம் விதிக்க இந்த புதிய சட்ட மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது, என மத்திய பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஷ்ரா செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும் ஒரு குழுவாக கட்டாய மதமாற்றம் செய்தால் 10 வருட சிறை தண்டனையும் ரூபாய் ஒரு லட்சம் அபராதமும் விதிக்கவும் இந்த புதிய சட்டத்தில் வழி வகை உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்