பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்துக்கு தமிழக அரசு கூடுதலாக 1805.48 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ஒரு வீட்டிற்கான அலகு தொகை ரூபாய் 1,20,000 ஆகும். இதில் மத்திய அரசு 60 சதவிகித பங்கு தொகையாக ரூபாய் 72,000 யும் மாநில அரசு தனது பங்கான 40 சதவிகிதத்தில் ரூபாய் 48,000 யும் அளித்து வருகிறது. மேலும் ஒவ்வொரு வீட்டுக்கும் காங்கிரீட் மேற்கூரை அமைப்பதற்காக தமிழக அரசு கூடுதலாக ரூபாய் 50,000 அளித்து வருகிறது.
கூடுதலாக மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்ட ஊதியத்தின் அடிப்படையில் 90 மனித சக்தி நாட்களுக்கான ஊதியம் ரூ.23,040 மற்றும் தனி நபர் இல்லக்கழிப்பறை கட்டும் பணிக்கு ரூ.12 ஆயிரம் ஒருங்கிணைந்து வழங்கப்படுகிறது. இதன் மூலம் ஒரு வீட்டிற்கான மொத்த அலகு தொகை ரூபாய் 1.70 லட்சமாகும்.
இதில் ஏற்கனவே வழங்கி வந்த மேற்கூரை அமைப்பதற்கான ரூபாய் 50 ஆயிரத்தை உயர்த்தி ரூபாய் 1,20,000 ஆக வழங்க தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் ஒரு வீடு கட்டுவதற்கான அலகு ரூபாய் 1.70 லட்சம் என்பதிலிருந்து ரூபாய் 2.40 லட்சமாக அதிகரித்துள்ளது. இதற்காக தமிழக அரசால் கூடுதலாக ரூபாய் 1805.48 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். இதன் மூலம் சுமார் 2,50,000 பயனாளிகள் பயன்பெறுவர்.