மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் மோகன் லால். இவர் நடித்த ‘புலி முருகன்’ சினிமா 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை குவித்து சாதனை படைத்தது. ஜீத்து ஜோஸப் இயக்கத்தில் மோகன் லால் நடித்த ‘த்ரிஷ்யம்’ சினிமா மெகா ஹிட் அடித்தது. கிரைம் த்ரில்லர் திரைப்படமான ‘த்ரிஷ்யம்’ தமிழில் பாபநாசம் என்ற பெயரில் வெளியானது. அதையும் ஜித்துஜோசப் இயக்கினார், கமல்ஹாசன் மற்றும் கெளதமி பாபநாசம் சினிமாவில் நடித்திருந்தனர். பாபநாசம் சினிமா தமிழில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் மோகன்லால் நடிக்கும் ‘த்ரிஷ்யம் 2’ திரைப்படம் எடுத்து முடிக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த சினிமா அமேசான் பிரேமில் வெளியாக உள்ளது.
அமேசான் பிரேம் வீடியோவில் த்ரிஷ்யம் 2 சினிமாவின் டீசர் வெளியாகியுள்ளது. 2021-ம் ஆண்டில் அமேசான் பிரேமில் உலகம் முழுவதும் த்ரிஷ்யம் 2 வெளியிடப்படுகிறது. உலகம் முழுவதும் உள்ள 240 நாடுகளில் உள்ள ரசிகர்களை இந்த திரைப்படம் சென்றடையும் வகையில் அமேசான் வெளியிட உள்ளது. ஆசீர்வாத் சினிமாஸ் என்ற பேனரில் ஆன்றணி பெரும்பாவூர் த்ரிஷ்யம் 2 திரைப்படத்தை தயாரித்துள்ளார். த்ரிஷ்யம் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த மீனா த்ரிஷ்யம் 2-விலும் நடித்திருக்கிறார். இப்படத்தில் சித்திக், ஆஷா சரத், முரளி கோபி, அன்சிபா ஹாசன், எஸ்தர் அனில், சாய்குமார், கே.பி. கணேஷ் குமார், ஜாய் மேத்யூ, அனீஷ் ஜி நாயர் மற்றும் அஞ்சலி நாயர் ஆகியோரும் நடித்திருக்கின்றனர். ஏற்கனவே வெற்றிபெற்ற படத்தின் இரண்டாம் பாகம் என்பதால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பாடு காத்திருக்கிறார்கள்.