வீட்டில் நான்கு ஆடுகள் இருப்பது வங்கியில் பணம் இருப்பதற்குச் சமம் எனச் சொல்வார்கள். அதற்குக் காரணம் உண்டு. திடீர் என ஏதேனும் அவசரம் என்றால் அந்த ஆடுகளை விற்று உடனடி பணத்தேவையை நிறைவேற்றிக் கொள்ளமுடியும். இதனால் ஆடுவளர்ப்பு எப்போதுமே வருமானத்துக்கு நல்ல வாய்ப்பாகவே இருக்கிறது. இந்நிலையில் மகாராஷ்டிரத்தில் ஒரே ஒரு ஒற்றையாடு 70 லட்சம் ரூபாய்க்கு பேரம் பேசப்பட்டிருக்கிறது.
அந்த ஆட்டின் பெயர் மோடி என வைத்திருக்கிறார் அதை வளர்க்கும் விவசாயி பாபு மெட்கரி. மட்கியால் ரகத்தை சேர்ந்த இந்த ஆடு தனித்துவமான தோற்றம், அதன் கறியின் ருசி, தரத்துக்கு பெயர்பெற்றது. மகாராஷ்டிரா மாநிலத்தின் சாங்லி மாவட்டத்தின் ஜாட் வட்டத்துக்குட்பட்ட மட்கியால் பகுதியை பூர்வீகமாகக் கொண்ட ஆடுகள் என்பதால் அந்த ஊரின் பெயரே இந்த ரக ஆட்டுக்கு வைக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆட்டை வளர்த்துவரும் பாபு மெட்கரியிடம் தான் இந்த மோடி ஆடு இருக்கிறது.
பாபு தொடக்கத்தில் இந்த ஆட்டுக்கு சார்ஜா என பெயர் வைத்திருக்கிறார். ஆட்டுசந்தைக்கு அழைத்துப்போகும்போதெல்லாம் சார்ஜாவை அதிகவிலைக்கு பலரும் கேட்க, சார்ஜாவுக்கு கடும் டிமாண்ட் ஆனது. அதேநேரம் பாபு மெட்கரி, சார்ஜா தான் தன் வீட்டுக்கு அதிர்ஷ்டம் என்பதை உறுதியாக நம்பினார். இதனால் அந்த ஆட்டை மட்டும் கொடுக்கவில்லை. சார்ஜாவுக்கு இருக்கும் தொடர் டிமாண்டினால் தொடர்ந்து தேர்தலில் ஜெயிக்கும் மோடியின் பெயரை வைத்ததாக கூறுகிறார் விவசாயி பாபு மெட்கரி.
ஒருகட்டத்தில் இந்த ஆட்டின் தோற்றத்தில் மயங்கி பலரும் வீட்டுக்கே வந்து விலைகேட்க கொடுக்க மனம் இல்லாமல்மோடி ஆட்டின் விலை ஒன்றரைகோடி என குதர்க்கமாக சொல்லியிருக்கிறார் ஆட்டின் உரிமையாளர் பாபு. ஆனால் வீட்டுக்கு வந்தவர்கள் அதையே நிஜ விலையாக பிக்ஸ் செய்துகொண்டு 70 லட்சம் ரூபாய்வரை பேரம் பேசியிருக்கிறார்கள். சார்ஜாவை பார்க்க வருவோர் அவரிடம் இருக்கும் மற்ற மட்கியால் இன ஆடுகளை 5 லட்சம் முதல் பத்து லட்சம் வரை விலைகொடுத்து வாங்கி செல்கின்றனர். இந்த மட்கியால் இன ஆடுகளின் பெருக்கத்துக்கு அரசும், கால்நடைத்துறையும் பலகட்ட முயற்சிகL செய்துவருகிறது.