மக்கள் நீதி மய்யத்தின் பொது செயலாளர் அருணாச்சலம் சென்னை வந்துள்ள மத்திய சுற்றுசூழல்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அருணாச்சலம், கமல்ஹாசன் மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை ஆதரிக்காததால், தான் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்ததாக கூறினார்.
விவசாயிகளின் நலனையும் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு இந்த மூன்று வேளாண் சட்டங்களையும் கொண்டு வந்துள்ளது. விவசாய குடும்பத்திலிருந்து வந்துள்ள, விவசாயத்தை பூர்வீக தொழிலாக கொண்டுள்ள எனக்கு இந்த சட்டங்களின் பலன் என்ன என்பது நன்றாக தெரியும். எனவே இந்த சட்டங்களை ஆதரிக்க மக்கள் நீதி மய்யத்தின் உயர்நிலை குழுவிலும், தலைவர் கமல்ஹாசனிடமும் கேட்டுக் கொண்டேன்.
பாரதிய ஜனதா கட்சி கொண்டு வந்ததாக நீங்கள் எண்ண வேண்டாம், மத்திய அரசு விவசாய நலனுக்காக கொண்டு வந்த சட்டங்களாக கருதி ஆதரிக்க வேண்டும் என்று கோரினேன். ஆனால் மக்கள் நீதி மய்யம் விவசாயிகளின் நலனையோ, பாதுகாப்பையோ கருத்தில் கொள்ளாமல் கட்சி அடிப்படையில் முடிவு எடுத்து இதை ஆதரிக்கவில்லை. மேலும் விவசாயிகளின் போராட்டத்துக்கும் ஆதரவு தெரிவித்தனர். விவசாய பின்புலத்தில் இருந்து வந்த எனக்கு இது உருத்தலாக இருந்ததால் மக்கள் நீதி மய்யத்திலிருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் அடிப்படை தொண்டனாக இணைந்துள்ளேன் என்று அருணாச்சலம் கூறினார்.
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் முருகன் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் உடனிருந்தனர்