தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் அதிக அளவு மழை பெய்துள்ளது. இதனால் தாமிரபரணி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் தாமிரபரணி கரையோரப் பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் வெள்ளம் புகுந்து மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. மேலும் விளைநிலங்களிலும் வெள்ளம் புகுந்தது. கடந்த 24 மணி நேரத்தில் மணிமுத்தாறு அணைக்கு நீர்வரத்து செல்லும் மாஞ்சோலை எஸ்டேட் பகுதியில் அதிக மழைப்பொழிவு இருந்துள்ளது. மாஞ்சோலை மற்றும் ஊத்து பகுதியில் 52 செ.மீ மழை பெய்துள்ளது. அதில் மாஞ்சோலையில் மட்டும் 35 செ.மீ மழையும், நாலுமுக்கு எஸ்டேட் பகுதியில் 37 செ.மீ மழையும் பெய்தது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் அதிக அளவு மழை செய்த இடமாக திருநெல்வேலி மாவட்டத்தின் மாஞ்சோலை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.