நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் பகுதியைச் சேர்ந்தவர் ஆட்லின் ரிபா. இவருக்கும் குளச்சல் பாலப்பள்ளம் பகுதியைச் சேர்ந்த அருள் ஜாக்சன் என்பவருக்கும் திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளனர். ஆட்லின் ரீபாவின் கணவர், நெல்லை மாவட்டத்தில்போலீஸ்காரராக வேலை பார்த்து வருகிறார். ஆட்லின் ரிபா கடந்த 2 நாட்களுக்கு முன்பு குழந்தைகளுடன் தனது பெற்றோர் வீட்டிற்கு வந்திருந்தார்.

நேற்றிரவு மாமியார் வீட்டிற்கு சென்ற அருள் ஜாக்சன் சென்றுள்ளார். அப்போது கணவன்- மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. மேலும் குழந்தைகள் தொலைக்காட்சி முன்பு இருந்து சுட்டி டிவி பார்த்துக் கொண்டிருந்துள்ளனர். இதை தந்தை கண்டித்ததாக கூறப்படுகிறது. ஆனால் குழந்தைகள் தந்தை சொல்லைக் கேட்காமல் தொடர்ந்து தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தனர். இதனால் ஆத்திரமடைந்த போலீஸ்காரர் அருள் ஜாக்சன் மாமியார் வீட்டிற்கு தீ வைத்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார்.
தீ கொளுந்து விட்டு எரிந்ததையடுத்து வீட்டில் இருந்தவர்கள் வெளியே ஓடி வந்தனர். பின்னர் நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர்.தீ விபத்தில் துணிமணிகள், கட்டில் மற்றும் மின்சாதன பொருட்கள் எரிந்து சேதமடைந்தது. இது குறித்து தகவல் அறிந்ததும், வடசேரி போலீசாரும் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.கணவன் தாக்கியதில் காயமடைந்ததாக கூறி ஆட்லின் ரிபா ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து போலீசார் ஆட்லின் ரிபாவிடம் விசாரணை மேற்கொண்டனர். குழந்தைகள் சுட்டி டிவி பார்த்ததை தடுத்தும் கேட்காததால் மாமியார் வீட்டிற்கு போலீஸ்காரர் தீ வைத்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.