மத்திய பிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தில் உள்ள பரிவார கிராமத்தைச் சேர்ந்தவர் ஓம் நாராயண பெருமாள். விவசாயியான இவர் தனது சொத்து அனைத்தையும் அவருடைய மனைவி சம்பா பாய்க்கும், ஜாக்கி என்கிற அவர் வளர்க்கும் செல்ல நாய்க்கும் மட்டுமே சேரும் என்று எழுதி வைத்துள்ளார்.
நாராயணனின் உயிலில் எனது மனைவி சம்பா பாய் என்னை மிக அக்கறையோடு கவனித்துக் கொண்டாள். என் செல்ல வளர்ப்புப் பிராணியான நாய் என்னை ஜாக்கிரதையாக பார்த்துக் கொண்டது. இப்போது நான் மிக நலமாக உள்ளேன் என் மரணத்திற்கு பிறகு செல்ல நாய் அனாதை ஆகி விடுமோ என்கிற அச்சம் எனக்குள் இருக்கின்றது. நான் இல்லாத காலத்திலும் எனது நாய் அனாதை ஆகிவிடக்கூடாது என்பதற்காக எனது சொத்தில் ஒரு பாதியை எனது நாய்க்கு எழுதி வைக்கிறேன்.
இறுதி மூச்சு வரை இவர்கள் இருவர் மட்டுமே என்னை கவனிப்பார்கள் என்று நான் நம்புவதால் என் மரணத்திற்கு பின்பும் இவர்கள்தான் எனது இறுதி சடங்கை செய்ய வேண்டும் என அவர் உருக்கமாக அதில் பதிவிட்டுள்ளார். மேலும் தன் மரணத்திற்கு பிறகு தனது நாய் ஜாக்கியை கவனித்துக் கொள்பவர்கள் என் சொத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அதில் தெரிவித்துள்ளார் .
இந்த உயிலில் ஒரு ஏக்கர் விவசாய நிலம் உள்ளிட்ட பல்வேறு சொத்துக்கள் அடங்கியுள்ளன. மகனுடன் ஏற்பட்ட தகராறில் ஓம் நாராயணன் உயிலில் எழுதி வைத்ததாக தெரியவருகின்றது. இதனையடுத்து மகன் மிகுந்த அதிருப்தி அடைந்து தான் இனி சரிவர அப்பாவைப் பார்த்துக் கொள்வதாகச் சொன்னார். இதனைத்தொடர்ந்து அவர் நாய்க்கு எழுதிவைத்த உயிலை ரத்துசெய்தார்.