அ.தி.மு.க செய்தி தொடர்பாளர் பாபு முருகவேல் சென்னை காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கொடுத்துள்ள புகாரில் கூறப்பட்டுள்ளதாவது, ” கோவையில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் நடத்திய கிராமசபை கூட்டத்தில் ஒரு பெண் கேட்ட கேள்விக்கு அவரால் பதில் சொல்ல முடியவில்லை. அதற்கு அந்தப் பெண்ணை அமைச்சர் வேலுமணி அனுப்பியதாக கூறி தாக்குதல் நடத்தினர்.
அதன் பிறகு பேசிய ஸ்டாலின் ‘நீங்க இந்த ஒரு கூட்டத்தை தடுக்க முயற்சி பண்ணலாம். நீங்கள் நடத்துகிற எந்த கூட்டத்தையும் நடத்த விடமாட்டோம். இதே மாதிரி தொடர்ந்தால் முதல்வர் எங்கேயும் கூட்டத்தில் பேச முடியாது. ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள் நாங்கள் இறங்கினால் என்ன ஆகும் என்று உங்களுக்கு தெரியும்’ என பேசினார். முதல்வருக்கும் அமைச்சர் பெருமக்களுக்கும் எச்சரிக்கை விடுக்கும் படி பேசியதுடன், சைகை காட்டி மிரட்டவும் செய்திருக்கிறார்.
தமிழக முதல்வர் தலைமையில் நடக்கும் பொங்கல் விழா மற்றும் அரசு விழாக்களை தடுக்கும் நோக்கத்தில் தமது கட்சிக்காரர்களை வன்முறைக்கு தூண்டி, சட்டம் மற்றும் பொது ஒழுங்கை சீர்குலைகும் வகையில் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். எனவே ஸ்டாலுன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.