திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் பகுதியில் பல்வேறு திருட்டு வழக்குகளில் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் கூடங்குளம் காவல் நிலைய வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அதில் மூன்று பைக்குகள் மற்றும் பல வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட செல்போன் உள்ளிட்ட பொருட்கள் திடீரென திருட்டு போயிருக்கிறது. காவல் நிலையத்திலேயே கைவரிசை காட்டியது யார் என போலீஸார் ரகசியமாக விசாரணை நடத்தியிருக்கிறார்கள்.
கூடங்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜான் பிரிட்டோ தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அப்போது இரவு நேர பணியில் இருந்த காவலர்களின் லிஸ்ட் எடுக்கப்பட்டுள்ளது. அதில் பைக் திருடப்பட்ட தினங்களில் இரவுப்பணி செய்தது யார் யார் என போலீஸார் பட்டியலிட்டனர். அதுமட்டுமல்லாது அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்தனர். அதில் கூடங்குளம் காவல் நிலையத்தில் பணிசெய்த பெண் காவலர் கிரேசியா (வயது 29) மீது சந்தேகம் ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து கிரேசியாவிடம் போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தினர். அதில் இரவில் போலீ்ஸ் நிலையத்தில் பணியில் இருந்தபோது, மற்ற காவலர்கள் தூங்கிய பிறகு தன்னுடைய கணவரை போன் செய்து அழைத்ததாகவும். கணவர் அன்புமணி உதவியுடன் போலீஸ் நிலைய வளாகத்தில் உள்ள 3 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் போலீஸ் நிலையத்தில் இருந்த செல்போன், ஒரு கைதியின் வெள்ளி அரைஞாண் கயிறு ஆகியவற்றை திருடியதை கிரேசியா ஒப்புக்கொண்டிருக்கிறார். திருடும்போது காவல் நிலைய கண்காணிப்பு கேமராவை ‘சுவிட்ச் ஆப்’ செய்துவிடுவதாகவும் கிரேசியா தெரிவித்திருக்கிறார்.
இதையடுத்து காவலர் கிரேசியா மற்றும் அவரது கணவர் அன்புமணி ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். கிரேசியா கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள ஈத்தவிளை பகுதியைச் சேர்ந்தவர். அவரது கணவர் அன்புமணி மீது ஏற்கனவே பல திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.