தமிழ் திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகை குஷ்பு 2010 ஆம் ஆண்டு திமுகவில் தன்னை அடிப்படை உறுப்பினராக இணைத்துக் கொண்டார். 2011 ஆண்டு சட்டசபை தேர்தலிலும், 2014 நாடளுமன்ற தேர்தல் பிரச்சாரத்திலும் திமுகாவுக்காக கடுமையாக பிரச்சாரம் செய்தார்.
இதன்பிறகும் அவருக்கு எந்த பதவியும் திமுகவில் தரப்படாததால் 2014 நவம்பர் மாதத்திலேயே திமுகவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியின் அப்போதைய தலைவர் சோனியா காந்தி முன்னிலையில் காங்கிரஸில் தன்னை இணைத்துக் கொண்டார். காங்கிரஸ் கட்சியில் தேசிய செய்தி தொடர்பாளர் பதவியை தவிர அவருக்கு வேறு எந்த பதவியும் தரப்படாததால், சில மாதங்களுக்கு முன்னர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து கொண்டார்.
பாரதிய ஜனதா அவருக்கு மாநிலங்கள் அவை உறுப்பினர் பதவியை வழங்க உள்ளதாகவும் பேசப்பட்டு வந்தது. ஆனால் குஷ்புவுக்கு எந்த பொறுப்பும் வழங்கப்படவில்லை.இந்நிலையில் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பாரதிய ஜனதா கட்சி மாநிலத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தொகுதி பொறுப்பாளர்களை நியமித்து வருகிறது.
அந்தவகையில் குஷ்புவுக்கு சேப்பாக்க்ம் -திருவல்லிக்கேணி தொகுதி பொறுப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தொகுதி பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுபவர்களே கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட வாய்புள்ளதாகவும் கூறப்படுகிறது.