கன்னியாகுமரி பாராளுமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் அகில பாரத இந்துமகாவின் மாநிலத் தலைவர் த.பாலசுப்பிரமணியன் ஜி போட்டியிடுகிறார்.
தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் வேட்பாளரை களமிறக்கிவருகிறது. நாட்டில் உள்ள பெரும்பான்மை இந்துக்களின் பாதுகாப்பிற்காக செயல்படும் அகில பாரத இந்து மகாசபா அமைப்பும் வரும் தேர்தலுக்காக களப்பணியில் மிகத் தீவிரமாக இயங்கிவருகிறது. அதிலும் குறிப்பாக தேசத்திற்கு எதிரானவர்களையும், இந்திய இறையாண்மைக்கு எதிரானவர்களையும் எதிர்த்து களத்தில் போட்டியிட தயாராகி வருகிறது இந்துமகாசபா. இதற்காக தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டங்களிலும், முக்கிய நகரங்களிலும் நிர்வாகிகள் கூட்டத்தை நடத்தி தேர்தலுக்கு தயாராக உள்ளது. தமிழகம் முழுவதும் வேட்பாளர்களையும் களம் இறக்குகிறது. இதில் முக்கிய அம்சமாக கன்னியாகுமரி பாராளுமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் கட்சியின் மாநிலத் தலைவர் த.பாலசுப்பிரமணியன் ஜியே களம் இறங்குகிறார்.
கன்னியாகுமரி பாராளுமன்றத் தொகுதியில் கடந்த 2019 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்ட வசந்தகுமார் வெற்றிபெற்றார். சிலமாதங்களுக்கு முன்னதாக அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிர் இழந்தார். இதனால் பொதுத்தேர்தலோடு சேர்த்து குமரி பாராளுமன்றத் தொகுதிக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் விஜய் வசந்தும், பாஜக சார்பில் பொன்.ராதாகிருஷ்ணனும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அகில பாரத இந்து மகா சபா சார்பில் த.பாலசுப்பிரமணியன் ஜி களம் இறங்குகிறார். இதனால் கன்னியாகுமரி பாராளுமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.