சபரிமலையில் அதிக எண்ணிக்கையிலான பக்தர்களை அனுமதிக்க உத்தரவிட்ட கேரள உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் முறையீடு
தினமும் 5000 பக்தர்களை அனுமதிக்கலாம் என்ற கேரள உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது.
டிசம்பர் 14 முதல் 2021 ஜனவரி 14 வரையிலான சபரிமலை கோயில் திருவிழா காலங்களில் கோவிட் -19 தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக மாநில அரசு ஒரு உயர்மட்ட குழுவை அமைத்துள்ளது. தலைமை செயலாளர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள அந்த குழு சபரிமலையில் வார நாட்களில் தலா 2000 பக்தர்களையும் வார இறுதி நாட்களில் 3000 பக்தர்களையும் அனுமதிக்கலாம் என கூறியுள்ளது.
அந்த குழு கடந்த டிசம்பர் 14 தேதி, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களின் அடிப்படையில் பக்தர்களின் எண்ணிக்கையை வார நாட்களில் 2000 மற்றும் வார இறுதி நாட்களில் 3,000 என அதிகரிக்க அனுமதி வழங்கியது. இதற்கிடையில் மாநில உயர்நீதி மன்றம் பக்தர்களின் எண்ணிக்கையை 5,000 ஆக உயர்த்த உத்தரவிட்டுள்ளது.
கோவிட் தொற்று பரவல் காரணாமாக பாதிக்கப்படும் காவல்துறையினர், அரசு ஊழியர்கள் மற்றும் பக்தர்களின் எண்ணிக்கை சபரிமலையில் அதிகரித்து வருகிறது. காவல்துறையினர் பக்தர்களின் கூட்டத்தை ஆன்லைன் வரிசை மூலம் கட்டுப்படுத்தி வருகின்றனர். மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கோவிட் பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில் சபரிமலைக்கு அனுமதிக்கப்படும் பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது காவல்துறை மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்களுக்கு மேலும் பணிசுமையை அதிகரிக்கும். மேலும் இங்கிலாந்தில் புதிய வகை கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது. எனவே பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க கூடாது என கேட்டு கேரள அரசு உச்சநீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது.