சொத்துகுவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை முடிந்த சசிகலா கடந்த 27-ம் தேதி விடுதலை செய்யப்பட்டார். பெங்களூரில் ஒரு ரிசாட்டில் தங்கியிருக்கும் சசிகலா வரும் 7-ம் தேதி சென்னை வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் சசிகலாவை கர்நாடக அதிமுக செயலாளர் எம்.பி.யுவராஜ் நேரில் சந்திக்க சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து அவரது பதவி பறிக்கப்பட்டதுடன், கட்சியின் அடிப்படை உறுப்பினரில் இருந்தும் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில்,
கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டாதாலும், கட்சிக்கு அவப்பெயர் உண்டாக்கும் விதத்தில் செயல்பட்டதாலும் இன்று முதல் எம்.பி.யுவராஜை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்பிலிருந்தும் நீக்கப்படுவதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே திருநெல்வேலியில் சசிகலாவை வரவேற்று போஸ்டர் ஒட்டிய கட்சி நிர்வாகி நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.