மக்களுக்கு நன்மை பயக்கும் என்றால் எந்த ஈகோவையும் விட்டுக்கொடுத்து ரஜினியுடன் ஒன்றிணைய தயார் என கமல்ஹாசன் சமீபத்திய பிரச்சார நிகழ்ச்சியில் உறுதிபட கூறியுள்ளார்.

மக்கள் நீதி மையம் கட்சி யின் மூலம் அரசியல் பிரவேசம் வந்திருக்கும் நடிகர் கமலஹாசன் தமிழகமெங்கும் சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பிரசாரத்தில் ஈடுபட்ட கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, ‘’நானும் ரஜினியும் இன்னமும் நட்பை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறோம்.எங்கள் நட்பின் ஆணிவேரை யாரும் அசைக்க முடியாது. அரசியலில் அவரது பயணமும் எனது பயணமும் ஒன்றுதான். ஆனால் அவர் கொள்கை என்ன என்று முழுமையாக என்னிடம் சொல்லவில்லை. அதனால் முதலில் அவரது கொள்கையை சொல்லட்டும். அந்தக் கொள்கையை உண்மையாகவே மக்களுக்கு நன்மை பயக்கும் என்றால் நானும் ரஜினியும் எந்த ஈகோவையும் விட்டுக்கொடுத்து ஒன்றிணைய தயார்.

எம்.ஜி.ஆர். திமுக திலகமோ, அதிமுக திலகமோ அல்ல. அவர் மக்கள் திலகம் என்பதால் ஏழரை கோடி மக்களும் சொந்தம் கொண்டாடலாம்.’’ இவ்வாறு கமலஹாசன் பேசியிருக்கிறார் இதுபோக தமிழகத்தில் மாவட்ட வாரியாக தனது சூறாவளி பிரச்சாரத்தை தொடர்ந்து வருகிறார் கமல்.