சீரமைப்போம் தமிழகத்தை என்ற தலைப்பில் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் தமிழகம் முழுவதும் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். ஐந்து கட்டமாக நடந்த இந்த பிரசாரத்தில் சுமார் ஐந்தாயிரம் கிலோ மீட்டருக்கு மேல் பயணித்து மக்களை சந்தித்தார் கமல்.
அதுபோல பிக்பாஸ் சீசன் -4 நிகழ்ச்சியையும் முடித்துள்ளார் கமல்ஹாசன். இந்த நிலையில் கமல்ஹாசன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ” சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட ஒரு விபத்தில் காலில் ஒரு அறுவை சிகிச்சை செய்து இருந்தேன். அதன் தொடர்ச்சியாக இன்னொரு சர்ஜரி செய்யவேண்டி இருந்தது. அதற்காக ஓய்வு தேவை என மருத்துவர்கள் அறிவுறுத்தி இருந்தார்கள். அதையும் மீறி தான் அரசியல், சினிமா ஆகியவற்றை செய்து வந்தேன். பிரசாரத்தை தொடங்கும் போதே காலில் சிறு வலி இருந்தது.
மக்களின் அன்பே மருந்தாக அமைந்தது. இப்போது சிறிய ஓய்வு கிடைத்திருக்கிறது. ஆகவே காலில் சிறு அறுவை சிகிச்சை செய்துகொள்ள இருக்கிறேன். சில நாள் ஓய்வுக்கு பிறகு மீண்டும் என் பணியை விசையுடன் தொடர்வேன். அதுவரை இணைய வழியில் உங்களைச் சந்தித்துக் கொண்டுதான் இருப்பேன்” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.