சென்னை ராயபுரம் தொகுதியில் வார்டு சபை நடத்திய தி.மு.க தலைவர் ஸ்டாலின் அந்த தொகுதியில் அமைச்சர் ஜெயக்குமார் எந்த பணியும் செய்யவில்லை என குற்றம்சாட்டினார்.
இதையடுத்து தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், “சென்னையில் கிராமமே கிடையாது கிராமசபை நடத்துகிறாராம் ஸ்டாலின். இதுபற்றி சொன்னதும் அதை வார்டு சபையாக மாத்துறாராம். வார்டு சபை எங்கே இருக்கிறது. அப்பாவி மக்களுக்கு பணம் கொடுத்து கூட்டிட்டு வந்து இவர் மைக்கப்பிடிச்சு பேசிட்டு போகிறார்.
ராயபுரத்தில பேசின ஸ்டாலின் அமைச்சர் ராயபுரத்துக்கு ஒன்னுமே செய்யன்னு சொல்லியிருக்கிறார். நான் 91-ல் இருந்து சட்டசபை தொகுதியை மாற்றாமல் தொடர்ந்து ராயபுரத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்று வருகிறேன். 2021-ல் நான் ராயபுரம் தொகுதியில் போட்டியிடுகிறேன். தி.மு.க தலைவர் ஸ்டாலின் ராயபுரத்தில் போட்டியிட தயாரா? அவர் ரெண்டு தொகுதிகளில் போட்டியிடக்கூடாது. ராயபுரம் தொகுதியில் போட்டியிட நான் ரெடி, என்னை எதிர்த்து போட்டியிட ஸ்டாலின் ரெடியா?” என அமைச்சர் ஜெயக்குமார் சவால் விடுத்துள்ளார்.