திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரையில் மிகவும் தீவிரம் செலுத்திவருகிறார். அவரது மகனும், திரைப்பட நடிகருமான உதயநிதி ஸ்டாலினும் பிரச்சாரத்தில் வேகம் காட்டிவருகிறார். பாராளுமன்றத் தேர்தலில் பெற்ற மகத்தான வெற்றி ஸ்டாலினுக்கு எப்படியும் தான் அடுத்த முதல்வர் ஆகிவிடுவோம் என்னும் அசாத்திய நம்பிக்கையைக் கொடுத்துள்ளது. ஆனால் அது கொஞ்சம் ஓவர் டோஸ் ஆகியிருப்பது திமுகவினருக்கே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
திமுக கூட்டணியில் இப்போது காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் பிரதானமாக உள்ளன. அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, தமிழ்மாநில காங்கிரஸ், தேமுதிக, புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் உள்ளன. கூட்டணி அடிப்படையில் இரு திராவிடக் கட்சிகளும் சமபலத்துடனே இருக்கின்றன. எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பி.எஸ் என அதிமுக தரப்பில் இருவரும் தீவிரப் பிரச்சாரம் செய்துவரும் நிலையில் மு.க.ஸ்டாலின் ஒருபக்கம் கிராமசபைக் கூட்டங்களை நடத்திவருகிறார்.
பிரசாந்த் கிஷோரை மையப்படுத்தி அவரது யுத்திகளைப் பின்பற்றிக் காய்நகர்த்தி வருகிறது திமுக. தலையில் விக், சைக்கிளில் ரவுண்ட்ஸ் என அதகளம் காட்டிவருகிறார் ஸ்டாலின். கருணாநிதி, ஜெயலலிதா என்னும் இருபெரும் ஆளுமைகள் இப்போது உயிருடன் இல்லை. இப்படியான சூழலில் ஜெயலலிதா இருக்கும் போது வலுவாக இருந்த மகளிர் வாக்குகள் இப்போது அதிமுகவுக்கு கிடைக்குமா என்பதும் உறுதியாகத் தெரியாத சூழலில் பாராளுமன்றத் தேர்தலில் பெற்ற வாக்குகளை மனதில் கொண்டு மு.க.ஸ்டாலின் உற்சாகமாக இருக்கிறார். ஆனால் கடந்த பாராளுமன்றத் தேர்தலின் போதே தமிழக சட்டமன்றத்துக்கும் இடைத்தேர்தல் வந்தது. அதில், அதிமுக தன் இருப்பை உறுதிசெய்து ஆட்சியைத் தக்கவைத்தது. இன்னும் சொல்லப்போனால் திமுகவால் அந்த இடைத்தேர்தலில் அதிமுகவிடம் இருந்து தொகுதிகளைக் கைப்பற்ற முடியவில்லை.
அப்படியானால் மக்கள் நாடாளுமன்றத் தேர்தலை ஒரு கண்ணோட்டத்திலும், சட்டமன்றத் தேர்தலை ஒரு கண்ணோட்டத்திலும் தான் பார்க்கின்றனர். ஆனால் இதை மு.க.ஸ்டாலின் தெளிவாக உள்வாங்கிக்கொள்ளவில்லை என்பதன் வெளிப்பாடுதான் மு.க.அழகிரியை ஏற்றுக் கொள்ளாதது. அழகிரி, ஸ்டாலினைத்தான் திமுக தலைவராக ஏற்றுக்கொள்வதாகச் சொல்கிறார். ஆனாலும்கூட ஸ்டாலினால் அழகிரியை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இன்னும் சொல்லப்போனால் மு.க.ஸ்டாலினை பொருளாளர் ஆக்கியது, துணை முதல்வர் ஆக்க்கியது என எல்லாவற்றிலும் தன் பங்களிப்பு இருந்ததை வெளிப்படையாகவே பேசத் துவங்கியிருக்கிறார் அழகிரி. கூடவே தான் பெற்றுக்கொடுத்த தேர்தல் வெற்றிகளையும் ஆழமாக பட்டியல் இடுகிறார்.
அதில் முக்கியமானது, நாகர்கோவில் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக வெற்றிபெற்றதே இல்லை என அங்கிருக்கும் நிர்வாகி கபிலன் மூலம் தகவல் வந்ததும், தான் உடனே நாகர்கோவில் எம்.பி பதவிக்கு திமுக வேட்பாளரை நிறுத்தி வெற்றி பெறச் செய்து வரலாற்றை மாற்றி அமைத்ததைச் சொல்கிறார். திருமங்கலம் இடைத்தேர்தலில் மு.க.அழகிரியின் யுத்தி அழகிரி பார்முலா என புதிய டிரெண்டை உருவாக்கியது. ஆனால் அதையும் கூட கருணாநிதியின் யுத்திதான் எனச் சொல்கிறார் அழகிரி. இவ்வளவும் தன்னடக்கத்தோடு ஏறக்குறைய மன்றாடும் நிலைக்குச் சென்றுவிட்டார் அழகிரி. ஆனாலும் ஸ்டாலின் இறுக்கம் காட்டுகிறார்.
அழகிரியின் தேர்தல் பார்முலாவை பலமுறைப் பார்த்திருக்கிறோம். ரஜினி கட்சி தொடங்கினால் அவரோடு இடம்பெறலாம் என மறைமுகமாக வியூகம் வகுத்தார் அழகிரி. ஆனால் ரஜினி அனைவருக்கும் பெப்பே காட்டிவிட்டு கட்சியில்லை என ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுவிட்டார். நிலமை இப்படியிருக்க, மு.க.அழகிரியை வளைக்க பாஜகவும் கூட தூண்டில் போடுகிறது. வரும் 14 ஆம் தேதி சென்னையில் துக்ளக் ஆண்டுவிழாவுக்கு அமித்ஷா வருகிறார். அவர் வரும்போது மு.க.அழகிரிஐ அவரிடம் கொண்டுவிட ஒரு டீம் துடித்துக் கொண்டிருக்கிறது. கலைஞரின் மகனாக இருப்பதால் அதிமுக நோக்கியும் நகரமுடியாது. தேர்தலுக்கு இன்னும் நான்கு மாதங்களே இருக்கும் நிலையில் அழகிரி புதிய கட்சி துவங்கினால் எவ்வளவு சிக்கலாகும் என்பதையும் நன்றாகவே உணர்ந்திருக்கிறார்.
அதிமுகவில் இருந்து நகர்ந்து நின்ற டிடிவி.தினகரன் ஆர்.கே.நகரில் ஜெயித்தது என்ன யுக்தியோ, அதேபோல மு.க.அழகிரி எதிர்வினையாற்றினால் திமுகவுக்கு ஓரளவு பின்னடவை ஏற்படுத்தும் அபாயம் இருக்கிறது. ஆனால் ஸ்டாலின் இதையெல்லாம் யோசிக்கவே இல்லை. நான்கே மாதங்களில் முதல்வர் ஆகிவிடலாம் என யூகிக்கும் ஸ்டாலினுக்கு இப்போதைக்கு பலமான செக் வைக்க காத்திருக்கிறார் அழகிரி. இந்த செக்கில் விழுவாரா? எழுவாரா ஸ்டாலின்?