அதிமுகவில் ஓ.பி.எஸ்_ஈ.பி.எஸ் இருவரும் சேர்ந்து பொதுக்குழு, செயற்குழுவில் தோன்றினார்கள். பரஸ்பரம் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமியை பொதுவெளியில் ஓ.பி.எஸ் ஆதரவாளர்களும் ஏற்றுக்கொண்டார்கள். ஆனால் உள்ளுக்குள் இப்போதும் ஒரு பனிப்போர் நிகழ்ந்துகொண்டே தான் இருக்கிறது.

வெற்றி நடைபோடும் தமிழகமே என தொடங்கும் சின்னத்திரை விளம்பரத்தில் ஒரு காட்சியில் கூட துணை முதல்வரும், கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர் செல்வம் படம் இல்லை. பதிலுக்கு ஓ.பி.எஸ் தரப்பு தமிழ்நாட்டின் தலைமகன் என முன்னிலைபடுத்தும் விளம்பரத்தில் ஓ.பி.எஸ் படம் இல்லை. இதையெல்லாம் கொஞ்சம் அலசினால் தேர்தல் நேர கூட்டணியைப் போலத்தான் அதிமுகவுக்குள்ளும் நிகழ்வது தெரியும்.
அரசில் தான் செய்த சாதனைகளை விளம்பரம் செய்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. தான் செய்த சாதனைகளையும் பட்டிய இடுகிறார் ஓ.பி.எஸ். அதில் ஓ.பன்னீர் செல்வம் அண்மையில் செய்த ஒரு விளம்பரம் நெட்டிசன்களின் விவாதப் பொருள் ஆகியிருக்கிறது. ‘’இந்திய அரசியல் வரலாற்றிலேயே ஒரு மாநிலத்தின் நிதிநிலை அறிக்கையைத் தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கும் மேல் தாக்கல் செய்த ஒரே நிதி அமைச்சர் திரு.ஓ.பன்னீர் செல்வம் தான்’’ என முண்ணனி நாளிதழ்களில் ஒரு விளம்பரம் வந்தது. ஆனால் இது உண்மை அல்ல என்பதே சர்ச்சைக்குக் காரணம்.

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் தர்மயுத்தம் நடத்தினார் ஓ.பி.எஸ். தன் வசம் இருந்த முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு போர்க்கொடி தூக்கினார். 18 எம்.எல்.ஏக்கள் அவர் பக்கம் இருந்தனர். அந்த ஆண்டு நிதி அறிக்கை பட்ஜெட்டை ஓ.பி.எஸ் தாக்கல் செய்யவில்லை. 2017 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை ஜெயலலிதா சமாதியில் வைத்துவிட்டு ஜெயக்குமார் தான் தாக்கல் செய்தார். 2017ல் நடந்த இந்த சம்பவத்தை மறந்துவிட்டுத்தான் பத்தாண்டுகள் தொடர்ந்து தாக்கல் செய்ததாக விளம்பரம் செய்கிறார் ஓ.பி.எஸ் என செல்லமாகக் கலாய்க்கின்றனர் நெட்டிசன்கள்.