இளைய தளபதி விஜய், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி கூட்டணியில் உருவாகி இருக்கும் மாஸ்டர் ரசிகர்களைக் கவர்ந்தானா? வாருங்கள் பார்ப்போம்.
கரோனா கால இடைவெளி, நீண்ட கால காத்திருப்புக்குப் பின் திரைக்கு வந்தது மாஸ்டர். மாநகரம், கைதி திரைப்படங்களின் மூலம் ரசிகர்களின் மன ஓட்டத்தைப் பிடித்த லோகேஷ் கனகராஜ் இயக்கும் படம் என்பதால் எதிர்பாப்பும் அதிகம் இருந்தது.
கதைக்கரு..
சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் தான் கதை நகர்கிறது. அங்கு வளரும் நடிகர் விஜய் சேதுபதி தான் வளர்ந்ததும் பெரிய ரவுடி ஆகிவிடுகிறார். கூடவே தன் ரவிடியிசத்துக்கு சிறார் சீர்திருத்தப்பள்ளி மாணவர்களையே பயன்படுத்துகிறார். அதே சீர்திருத்தப்பள்ளியில் ஆசிரியராக இருக்கும் விஜய், விஜய் சேதுபதியை வீழ்த்தி சிறுவர்களைக் காப்பதே மாஸ்டரின் ஒருவரிக்கதை.
முதல் ஒரு மணிநேரத்தில் கதையை ரசிகர்களிடம் கடத்துவதில் ரொம்பவே திணறி இருக்கிறார் இயக்குனர். ரவுடி விஜய் சேதுபதியின் அறிமுகம் மிரட்டலாகவும், விஜயின் அறிமுகம் கலகலப்பாகவும் உள்ளது.படம் முடிவடையும் நேரத்திலும் 20 நிமிடங்களுக்கு ஜவ்வாக இழுப்பது கொடுமை. வில்லன், நாயகனுக்கு நெருக்கமாக இருப்பவர்களை பலி வாங்குவதெல்லாம் 1990 களின் சினிமாவை நினைவூட்டுகிறது. அனிருத்தின் இசை படத்துக்கு பலம் சேர்க்கிறது.
விஜய் செம யூத்புல்லாகவும், விஜய் சேதுபதி மிரட்டலாகவும் நடித்திருக்கிறார்கள். தன் பிளாஸ்பேக் என சினிமா காட்சிகளை சொல்லும் இடத்தில் விஜய் ரசிக்கவைக்கிறார். நாயகி மாளவிகா மோகன் சும்மா தலைகாட்டி போகிறார். சிறுவர் சீர்திருத்தப்பள்ளியின் கதைக்களம் மட்டுமே புதிது என்பதைத் தவிர வழக்கமான ரவுடியிசம்..பலிவாங்கலில் மாஸ்டர் கொஞ்சம் வேகம் கம்மிதான்..
மதிப்பெண் 5/10