இன்றைக்கும் கிராமப் பகுதிகளில் கேபிள் சிறிதுநேரம் தெரியாவிட்டால் கேபிள் தெரிகிறதா? என்ற வார்த்தையைக் கூட சொல்ல மாட்டார்கள். அதற்குப் பதிலாக சன் டிவி தெரிகிறதா? என்று கேட்கும் அளவுக்கு சன் டிவிக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு அதிகம். இன்னும் சொல்லப்போனால் நீங்கள் பார்த்துக் கொண்டு இருப்பது சன்டிவியின் தமிழ்மாலை என்னும் வாசகம் ரசிகர்கள் மத்தியில் அவ்வளவு பேமஸ்.
இன்றும் சன் டிவியின் சீரியல்களுக்கு பெரிய ரசிகர் பட்டாளம் உண்டு. அதேபோல் சன் டிவியில் தீபாவளி, பொங்கலுக்கு என்ன படம் ரிலீஸ் செய்வார்கள் என காத்திருக்கும் ரசிகக் கண்மணிகள் அதிகம். இன்று ஓடிடி போன்ற தளங்களில் படங்கள் வெளியாகத் துவங்கிவிட்டாலும் சன்டிவியில் படம் பார்க்கும் உலகமே தனிதான். அனைத்து தரப்பு மக்களிடமும் ஆழமாக ஊடுருவியிருக்கும் சன்டிவியில் தேர்தல் நெருங்கும் சூழலில் அதிமுக விளம்பரம் தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருக்க கலாநிதிமாறனுக்கு காசு தான் இலக்கா என வேதனைக்குரல் எழுப்புகின்றனர் திமுகவினர் சிலர்.
ஒரு பிளாஸ்பேக்!
இதுதொடர்பாக ஒரு குட்டி பிளாஸ்பேக் சொல்வதும் இங்கு அவசியம். மாறன் எப்போதும் தன் செய்தி நிறுவனத்தை பரபரப்பாக வைத்துக்கொள்வார். அந்தவகையில் தேவையே அன்றி ஒவ்வொரு ஊரிலும் கலைஞரின் மகன்களில் யாருக்கு மாஸ்? என ஒரு சர்வேயை வெளியிட்டது அவர்கள் நடந்தும் பத்திரிகை. அதில் மதுரையின் நிலவரம் வர களவரம் ஆனது ஒரு முகாம். உடனே, மதுரை பத்திரிகை அலுவலகம் தீக்கிரையானது. மூன்றுபேர் உயிரும் இழந்தனர். அதன் பின்னரே சன் குழுமம் திமுகவுக் கானதாக இல்லை. அதற்குள் ஒரு வியாபார யுத்தி ஓடிக்கொண்டிருக்கிறதென அவசர, அவசரமாக கலைஞர் டிவியும், அதன் உதிரி சேனல்களும் உருவானது வரலாறு.
ரஜினியோடு தொழில் கூட்டு
ரஜினி ஆன்மீக அரசியலை முன்வைத்தார். திராவிட கட்சிகளுக்கு மாற்றாக ரஜினியின் மாற்று அரசியல் முன்வைக்கப்பட்டது. இன்னும் சொல்லப்போனால் ரஜினியை வைத்துத்தான் திமுகவை பயமுறுத்த வியூகம் வகுத்தது பாஜக. ஆனால் இத்தனைக்கும் பிறகும், ரஜினியை வைத்து அண்ணாத்தே படத்தின் படப்பிடிப்பை துவங்கியது சன் பிக்சர்ஸ். ஆக, சன் டிவிக்கு இயக்கம், சிந்தாந்தம் தாண்டி தொழில் மீது அதீத கண் இருந்தது. இன்னொருபுறத்தில் சன் பிக்சர்ஸின் தயாநிதிமாறனுக்கு அரசியல் பதவிகளும் சன் டிவியை காட்டியே வாங்கப்பட்டு வந்தது.
அதிமுக விளம்பரம்..
இதோ இப்போது சன் டிவியில் அதிமுகவின் விளம்பரம் மணிக்கு ஒருமுறை ஓடத் துவங்க டென்ஷனில் இருக்கிறது திமுக கூடாரம். இதுதொடர்பாக தர்மபுரி திமுக எம்.பி, டாக்டர் செந்தில்குமார் தன் பேஸ்புக்கில், ‘சன் டிவி பெரிய வணிக சாம்ராஜ்யமாக இருக்கலாம். ஆனால் கலைஞரின் உடன்பிறப்புகள் மற்றும் நம் தளபதியின் லட்சக்கணக்கான அடிமட்ட தொண்டர்கள் இவற்றை லேசாக எடுத்துக்கொள்வதில்லை. அதிமுக விளம்பரங்களைச் சுமந்து பணம் சம்பாதியுங்கள். அல்லது திமுக தொண்டனுக்கு விசுவாசமாக இருங்கள்.’’என காட்டமாக பதிவிட்டுள்ளார். அதேநேரம் சன் டிவியில் வெற்றிநடை போடும் தமிழகம் என்னும் விளம்பரம் தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
சன் டிவிக்கு காசுதான் குறியா? கொள்கையெல்லாம் கானல் நீரா? என்று கலைஞர் இருந்திருந்தால் உடன்பிறப்புக்களுக்கு கடிதம் எழுதியிருப்பார்.