தைபூச திருவிழாவை முன்னிட்டு பழனி கோயிலில் பா.ஜ.க மாநில தலைவர் முருகன், மாநில துணைத்தலைவர் அண்ணாமலை, தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி ஆகியோர் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அப்போது பா.ஜ.க தலைவர் முருகன் கூறுகையில், “கந்தசஷ்டியை இழிவு படுத்தியவர்களுக்கு வேல் யாத்திரை நடத்தி நாங்கள் தகுந்த பாடம் புகட்டினோம். இந்துமதத்தை அவமதித்த, விபூதியை கீழே கொட்டியவர்கள் இப்போது இந்து மதத்தை பாதுகாப்போம் என கூறுகிறார்கள்.
வேல் யாத்திரையை விமர்சித்த ஸ்டாலினை, நாங்கள் வேல் யாத்திரை தொடங்கிய திருத்தணியில், தை மாத கிருத்திகை நாளில் வேல் எடுக்க வைத்தார் முருக கடவுள். தேர்தல் ஓட்டுக்காக மக்களை ஏமாற்ற ஸ்டாலின் வேலை எடுத்திருந்தாலும் அவருக்கு முருகன் நல்ல ஆயுளை தரவேண்டும். டில்லியில் விவசாயிகள் போராட்டத்தில் நடந்த கலவரம் திட்டமிட்ட சதி” என்றார்.