வழக்கை வாபஸ் பெறுவதாக இளையராஜா அளித்த உறுதிமொழியை ஏற்று பிரசாத் ஸ்டுடியோவுக்குள் செல்ல இளையராஜாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
பிரசாத் ஸ்டியோவில் இருந்து அவரை வெளியேற்றியதை எதிர்த்தும், ஒரு நாள் தன்னை தியானம் செய்ய அனுமதிக்க கோரியும் இளையராஜா சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணை உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ் குமார் முன்னிலையில் கடந்த நான்கு நாட்களாக நடைபெற்று வருகிறது.
விசாரணையின் போது பிரசாத் ஸ்டுடியோ தரப்பு இளையராஜாவை தங்களது ஸ்டுடியோவுக்குள் அனுமதிக்க சில நிபந்தனைகளை விதித்திருந்தது. அதில் முக்கியமாக பிரசாத் ஸ்டுடியோ மீது இளையராஜா தொடுத்திருந்த வழக்குகளை வாபஸ் பெற்றால் இளையராஜாவையும் அவரது உதவியாளரையும் ஸ்டுடியோவிற்குள் அனுமதிக்க தயார் என கூறியிருந்தது. இதை ஏற்று இளையராஜா வழக்கை வாபஸ் பெறுவதாக தெரிவித்திருந்தார்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஒரு நாள் பிரசாத் ஸ்டுடியோவுக்குள் செல்வதற்கு இளையராஜாவுக்கு அனுமதி வழங்கியுள்ளார். ஸ்டுடியோவுக்கு சென்று இசை கருவிகளை எடுப்பது தொடர்பாக இருதரப்பும் பேசி ஒரு முடிவு எடுத்துக் கொள்ளலாம் எனவும் நீதிபதி தெரிவித்தார். இளையராஜா ஸ்டுடியோவுக்குள் செல்லும் போது காவல்துறை பாதுகாப்பு வழங்கவும், அங்கு நடைபெறுவது அனைத்தையும் கவனிக்க வழக்கறிஞர் ஆணையராக லட்சுமிநாராயணனை நீதிமன்றம் நியமித்துள்ளது