மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் கோவை மற்றும் ஈரோட்டில் ஐந்தாம்கட்ட தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். கோவை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கமல், “செல்லும் இடம் எல்லாம் மக்களிடம் எங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. கோவையில் எங்கள் விளம்பரங்களை அகற்றி கூடுதல் விளம்பரம் ஏற்படுத்தியுள்ளது அரசு. விளம்பர பதாகை அகற்றும் ஆர்வத்தை மக்கள் பணியில் காட்டியிருந்தால் நாங்கள் அரசியலுக்கு வந்திருக்கவே மாட்டோம்” என்றார்.

பின்னர் ட்விட்ரில் கருத்து தெரிவித்த கமல், “கோவை மக்களின் வரவேற்பு வழக்கமான ஆர்ப்பாட்டத்தோடு இருக்க, அரசின் வரவேற்பு ஆபாசமானதாக உள்ளது.போலீஸை வைத்தே கொடிக்கம்பங்களை வெட்டி வீழ்த்துவது, பேனர்களைச் சிதைப்பது,போஸ்டர்களைக் கிழிப்பது தொடர்கிறது. கொங்குமண்டலம் அதிமுகவின் கோட்டை என்கிற மாயை தகர்வது ஆளுங்கட்சிக்குத் தெரிந்துவிட்டதோ?” எனவும். “காவல் துறைக்குப் பல சோலிகள் இருக்கின்றன. நான் செல்லும் இடமெல்லாம் கொடிகளை அகற்ற, போஸ்டரைக் கிழிக்க, பேனர்களை அவிழ்க்க அவர்களைப் பயன்படுத்த வேண்டியதில்லை மாண்புமிகுக்களே” எனவும் கிண்டலாக கருத்து தெரிவித்துள்ளார் கமல்ஹாசன்.