நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி இன்று (ஜன.16) முன்கள பணியாளர்களுக்கு போடப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணிக்காக சுகாதாரத்துறை தயார் நிலையில் உள்ளது. தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போடுவதற்கான ஆய்வுப் பணியில் ஈடுபட்டார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், “கொரோனா தொற்று ஏற்பட்டு குணமடைந்து வீடு திரும்பியவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். ஆனால், கொரோனா பாதிப்பு ஏற்பட்டு 14 நாட்கள் நிறைவடையாதவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளக் கூடாது. யாரெல்லாம் இந்த தடுப்பூசியை போட்டுக் கொள்ளலாம் யாரெல்லாம் எடுத்துக் கொள்ளக்கூடாது என்ற சந்தேகத்திற்கு பதில் அளிக்கும் வகையில் கேள்வி பதில் அடங்கிய கையேடு வெளியிடப்பட உள்ளது.
தமிழகத்தில் மருத்துவ துறையை சார்ந்த முன் களப்பணியாளர்கள் 6 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி முதற்கட்டமாக போடப்பட உள்ளது. அடுத்த கட்டமாக மற்ற துறையைச் சேர்ந்த முன்கள பணியாளர்களுக்கும் தடுப்பூசி போடப்படும், மக்களுக்கு ஏற்படும் அச்சத்தைப் போக்க முதலில் மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கும் இந்த ஊசியை செலுத்த உள்ளோம். அப்படியும் மக்களுக்கு நம்பிக்கை வரவில்லை என்றால், மத்திய சுகாதாரத் துறை ஒப்புதல் அளித்தால் நானே கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள தயாராக உள்ளேன்” என்றார்