தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் வேட்பாளரை களமிறக்க தயாராகி வருகிறது. நாட்டில் உள்ள பெரும்பான்மை இந்துக்களின் பாதுகாப்பிற்காக செயல்படும் அகில பாரத இந்து மகாசபா அமைப்பும் வரும் தேர்தலுக்காக களப்பணியில் மிகத் தீவிரமாக இயங்கிவருகிறது. அதிலும் குறிப்பாக தேசத்திற்கு எதிரானவர்களையும், இந்திய இறையாண்மைக்கு எதிரானவர்களையும் எதிர்த்து களத்தில் போட்டியிட தயாராகி வருகிறது இந்துமகாசபா. இதற்காக தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டங்களிலும், முக்கிய நகரங்களிலும் நிர்வாகிகள் கூட்டத்தை நடத்தி தேர்தலுக்கு தயாராகி வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை களம் இறக்க உள்ளதாக அக்கட்சியின் மாநில தலைவர் தா.பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் அகில பாரத இந்து மகா சபாவின் இந்து ஆன்மீக அரசியல் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. இதற்கு சென்னை மாநகர தலைவரும் மாநில செய்தி தொடர்பாளருமான வி.ரவிக்குமார் தலைமை வகித்தார். அகில பாரத இந்து மகா சபா தமிழ் மாநில தலைவரும் அகில பாரத துணைத் தலைவருமான டாக்டர் தா பாலசுப்ரமணியம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மாநில பொதுச்செயலாளர் பொரி செந்தில், ஆலய பாதுகாப்பு மாநில தலைவர் நிரஞ்சன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். இதில் அகில பாரத இந்து மகா சபா தமிழ் மாநில தலைவர் தா பாலசுப்பிரமணியம் பேசுகையில், “இந்திய இறையாண்மைக்கு எதிரானவர்களை எதிர்த்து தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் இந்து மகாசபா போட்டியிடும். இளைஞர்கள், மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு மும்மொழி கொள்கையை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும். எந்த மொழியையும் படிப்பது மாணவர்களின் உரிமை. ஆனால் திராவிட கட்சிகளை சேர்ந்தவர்கள் தங்கள் பிள்ளைகளையும், பேரக்குழந்தைகளையும் இந்தி கற்றுக்கொடுக்கும் பள்ளியில் சேர்த்து படிக்கவைக்கிறார்கள்.
ஆனால் ஏழைகளின் குழந்தைகளை படிக்க விடாமல் தடுக்கிறார்கள். இது தமிழ் மக்களை வஞ்சிக்கும் செயல். காசி விஸ்வநாதர் ஆலயம், மதுராவில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணர் ஆலயங்களின் சொத்துக்களை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இஸ்லாமியர்களின் ஆட்சியின்போது தகர்க்கப்பட்ட இந்து கோயில்களை புனர் நிர்மாணம் செய்வதுடன், கோயில் சொத்துக்களை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
இந்நிகழ்வில் சென்னை மாநகரத் துணைத் தலைவர் தண்டபாணி, சென்னை மாநகர இளைஞரணித் தலைவர் முத்துக்குமார், கார்த்திக், சென்னை மண்டல ஆச்சார்யார் சபா அமைப்பாளர் ரவி சுவாமிகள், வட சென்னை மாவட்டத் தலைவர் கிருபாகரன், பொது செயலாளர் ஜெயபிரகாஷ், செயலாளர் ராஜசேகர், பொருளாளர் பாலன், பிரவீன் குமார், மணிகண்டன், சுந்தர், சுந்தர்ராஜன், கோடீஸ்வரன், சரவணன், திருவள்ளூர் மாவட்டப் பொறுப்பாளர் பாலஜி, யுவராஜ், ஆலயப் பாதுகாப்புப் பொறுப்பாளர்கள் சுபாஸ் செல்லத்துரை, விஜயகுமார், புதிய உறுப்பினர் சேகர், சதீஷ் சிக்கலா, சமூக சேவகி செல்வராணி, முத்துக்குமார், கிசன், வழக்கறிஞர் பிரிவின் பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.