தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அகில பாரத இந்து மகாசபா இந்து அரசியல் விழிப்புணர்வு யாத்திரையை நடத்திவருகிறது. இதன் ஒரு அங்கமாக சென்னை வில்லிவாக்கத்தில் அரசியல் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
இதில் ஆன்மீகத் தொண்டே வாழ்வின் உன்னதமான பணி என்னும் உயரிய நோக்கத்தில் ஆலயங்கள் தோறும் சென்று உழவாரப் பணி செய்துவரும் சிவத்தொண்டர்களுக்கு ‘அப்பர் விருது’ வழங்கப்பட்டது. ஆலயப் பாதுகாப்புப் பிரிவின் மாநிலப் பொதுச் செயலாளர் குருசாமிஜி இந்நிகழ்வினை ஏற்பாடு செய்து ஒருங்கிணைப்பு செய்தார். சிவத் தொண்டர்களுக்கு விருதினை அகில பாரத இந்து மகாசபாவின் தேசியத் துணைத் தலைவரும், தமிழகத் தலைவருமான டாக்டர் த.பாலசுப்பிரமணியன் ஜி வழங்கினார்.
தொடர்ந்து இந்து அரசியல் விழிப்புணர்வு கூட்டத்திற்கு வந்திருந்தவர்கள், இந்துக்களை இழிவாகப் பேசிவரும் திக, திமுக போன்ற அரசியல் கட்சிகளுக்கு வாக்களிக்க மாட்டோம் என அகில பாரத இந்துமகா சபாவின் தலைவர் டாக்டர்.த.பாலசுப்பிரமணியன்ஜி தலைமையில் உறுதிமொழி ஏற்றனர். இந்த நிகழ்ச்சியில் அகில பாரத இந்துமகா சபாவின் விவசாயப் பிரிவு மாநிலத் தலைவர் மாணிக்கம்ஜி, ஆலய பாதுகாப்பு பிரிவின் மாநிலத் தலைவர் ராமநிரஞ்சன், மாநில இளைஞரணித் தலைவர் கே.ஆர்.சுபாஸ், மற்றும் மாநில செய்தித்தொடர்பு அமைப்பாளர் ரவிக்குமார்ஜி உள்பட பலரும் கலந்துகொண்டனர்.
நிகழ்வுக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அகில பாரத இந்துமகா சபாவின் மாநிலத் தலைவர் டாக்டர் த.பாலசுப்பிரமணியன் ஜி கூறுகையில், ‘இன்றைய தினம் ஆலயத்தில் அறப்பணி செய்யக்கூடிய தன்னார்வத் தொண்டர்கள் உழவாரப் பணி செய்து ஆலயத்தை தூய்மையாக வைத்திருக்கவும், பாதுகாக்கவும் உதவி செய்கின்ற சர்வேஸ்வரா உழவாரத் தொண்டு அமைப்புக்கு விருது வழங்கியுள்ளோம். அப்பர் பெயரில் இந்த விருதை வழங்கியுள்ளோம். சென்னையில் நடக்கக்கூடிய இந்து அரசியல் விழிப்புணர்வு மாநாட்டிற்கு தமிழகத்தில் இருந்து அனைத்து சிவனடியார்களும் வருவதற்கான ஏற்பாடுகளைச் செய்திருக்கிறோம். அனைத்து சிவத்தொண்டர்களையும் கெளரவிக்கும் நிகழ்ச்சியை அங்கே நடத்த இருக்கிறோம்.
இதேபோல் கோயிலுக்கு பூமி தானம் கொடுத்த நல் உள்ளங்களுக்கும் விருது வழங்க பரிசீலனை செய்துவருகிறோம். இந்து தர்மத்தை, கலாச்சாரத்தை, பண்பாட்டை, பாதுகாக்கும் அத்தனை கலைஞர்களையும் கெளரவிக்கும் வகையில் அகில பாரத இந்து மகாசபா செயல்பட்டு வருகிறது. நிகழ்ச்சிக்கு வரும் அனைவருக்கு சிறப்பான இயற்கை உணவை வழங்க இருக்கும் சங்கரமடத்துக்கும் நன்றி. ‘’எனக் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வை திட்டமிட்டு வடிவமைத்ததோடு, சிறப்பான முறையில் ஒருங்கிணைப்பு செய்த ஆலயப் பாதுகாப்புப் பிரிவின் மாநிலப் பொதுச் செயலாளர் குருசாமிஜிக்கும் அகில பாரத இந்து மகாசபாவின் மாநிலத் தலைவர் டாக்டர்.த.பாலசுப்பிரமணியன்ஜி பாராட்டுக்களைத் தெரிவித்தார்.