அகில பரத இந்துமகா சபா சார்பில் மாநில நிர்வாகிகள் கூட்டமும், இந்துத்துவ அரசியல் விழிப்புணர்வுக் கூட்டமும் தக்கலை லெட்சுமி மகாலில் நடந்தது. இந்த நிகழ்ச்சியின் போது அகில பாரத இந்து மகா சபாவின் மாநிலத் தலைவர் தா.பாலசுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘’தமிழகத்தில் காவிப்புரட்சி நடந்துவருகிறது. இந்துக்கள் அரசியல் அனாதைகள் அல்ல. இந்துக்களுக்கும் அரசியலில் அமர்க்களமான எதிர்காலம் இருக்கிறது என்னும் சூழலை உருவாக்குவதற்காக அகில பாரத இந்துமகா சபா தமிழகத்தில் 234 தொகுதிகளிலும், பாண்டிச்சேரியில் 30 தொகுதிகளிலும் போட்டியிடும் வேலையை செய்து கொண்டிருக்கிறோம்.
தமிழகம் முழுவதும் இந்துத்துவ புரட்சி உருவாக்க வேலை செய்கிறோம். இந்துக்களை அவமானப்படுத்திபேசும் கயவர்களுக்கு பாடம்புகட்ட, தமிழக இந்துக்களை தட்டியெழுப்பும் யத்திரையைத் தொடங்கிவிட்டது. தமிழகத்தில் அனைத்து இந்துக் கோயில்களையும் பாதுகாக்கும் வகையில் ஆலயப்பாதுகாப்புப் பிரிவு செயல்படுத்த உள்ளோம். இந்து ஆலய பிரச்னைகளை சரிசெய்து, அவர்களை ஒருங்கிணைத்து தமிழகம் ஆன்மீகப்பூமி என்பதை மக்களுக்கு பறைசாற்ற ஆலய பாதுகாப்பு பிரிவு, அர்ச்சகர் பிரிவு, ஆச்சார்யா மகா சபா, ஆன்மீகப்பிரிவு என வேலை செய்து கொண்டிருக்கிறது. பாஜகவில் இந்துக்கள் அதிகம் இருக்கும் கட்சி, அது தவிர்க்க முடியாத சக்தியாக பாரதநாடு முழுவதும் வளர்ந்துவிட்டாலும் தமிழகத்தில் அதற்கு அடித்தளம் இல்லை. அவர்கள் இந்துத்துவப்பணியில் காவியோடு அணிசேர தயார் ஆனால் அகில பாரத இந்துமகா சபா அதற்குத் துணைநிற்கும். குமரி எம்.பி இடைத்தேர்தலிலும் போட்டியிட அகில பாரத இந்து மகாசபா களம் அமைத்து வேலை செய்து கொண்டிருக்கிறது.
அதற்கு தொகுதிப்பொறுப்பாளர்களாக சபரிகுமார், சிவகுமார், ராஜேஷ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். போராட்டம் தேவைதான். ஆனாலும்கூட அதில் இடதுசாரிகள் கை ஓங்கி நாட்டை முடக்கும் அளவுக்கு டெல்லியில் நிலமை இருக்கிறது. அந்த போராட்டத்தை நாங்கள் ஆதரிக்கவில்லை. விவசாயிகளுக்கு 40 நாள் போராட வசதி, பணம், பொருள் கொடுத்து நடக்கும் போராட்டம் இது. இவர்கள் ஏழைகள் அல்ல. வெளிநாட்டு சதியும் இருக்கலாம். பாரதநாட்டுக்கு, மத்திய அரசுக்கு களங்கம் ஏற்படுத்தும் முயற்சியில் இருப்பவர்களே போராட்டத்தை ஆதரிக்கிறார்கள். நாங்கள் தேசப்பக்தியோடு எதிர்க்கிறோம்.
எடப்பாடி பழனிச்சாமி நல்ல மனிதர். தமிழகத்தில் இந்துக்களுக்கு விரோதியான கட்சி திமுகதான். இந்துக்களுக்கு ஆதரவாக, தைப்பூசத்துக்கு விடுமுறை கொடுத்து, பொங்கலுக்கு 2500 ரூபாய் கொடுத்து இந்துக்களுக்கு அணுசரணையாக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமியைப் பாராட்டுகிறோம். தமிழக அரசையும் பாராட்டுகிறோம். அனைத்து மக்களுக்கும் கரோனா மருந்து இலவசமாக கொடுக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் எதற்கெல்லாமோ பட்ஜெட் போடுகிறார்கள். இதற்கும் ஒரு பட்ஜெட் போட்டு கொரோனா மருந்தை இலவசமாகக் கொடுக்க வேண்டும்.’’ எனத் தெரிவித்தார்.