சென்னையை சேர்ந்த தங்கத்தை இறக்குமதி செய்யும் ஒரு தனியார் நிறுவனத்துக்கு தாதுக்கள் மற்றும் உலோக வர்த்தக கழக அதிகாரிகள் சாதகமாக செயல்பட்டதாக கூறி சிபிஐ கடந்த 2012 ஆம் ஆண்டு ஒரு வழக்கு பதிவு செய்தது. இதை தொடர்ந்த அந்த நிறுவனத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 400.47 கிலோ அளவிலான தங்க கட்டிகள் மற்றும் தங்க நகைகள் சிபிஐ யால் கைப்பற்றப்பட்டது. கைப்பற்றப்பட்ட தங்க நகைகள் மற்றும் தங்க கட்டியை சிபிஐ அதிகாரிகள் அந்த நிறுவனத்தில் உள்ள பாதுகாப்பு பெட்டகங்களில் வைத்து பூட்டி சீல் வைத்து அதன் 72 சாவிகளையும் சென்னையில் உள்ள சிபிஐ சிறப்பு நீதி மன்றத்தில் ஒப்படைத்திருந்தனர்.
இந்நிலையில் அந்த நிறுவனம் பல்வேறு வங்கிகளில் வாங்கியிருந்த ரூபாய் 1,160 கோடி கடனை திரும்ப செலுத்த முடியாதத்தால் அந்த வங்கிகள் சிபிஐ வசம் உள்ள அந்த நிறுவனத்தின் தங்கத்தை விற்று தங்கள் கடனை செலுத்த கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். நீதிமன்றமும் தங்கத்தை வழங்க சிபிஐ க்கு உத்தரவிட்டது.
இதையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் அதிகாரிகள் முன்னிலையில் அந்த பாதுகாப்பு பெட்டகங்களை திறந்து தங்கத்தை அளவிட்ட போது தான் 400.47 கிலோ தங்கத்தில் 103.864 கிலோ தங்கம் குறைந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
கைப்பற்றப்பட்ட போது அந்த தங்கம் அனைத்தும் அந்த நிறுவனத்தில் உள்ள எடை பார்க்கும் கருவிகளில் அளவிடப்பட்டது. ஆனால் இப்போது வேறு நவீன கருவிகளில் எடை பார்க்கும் போது எடையில் வித்தியாசம் வந்திருக்கலாம் என சிபிஐ தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். ஆனால் அதை ஏற்றுக் கொள்ளாத நீதிமன்றம் மாநில குற்ற பிரிவு குற்ற புலனாய்வுத் துறை காவல்துறையினர் (சிபிசிஐடி) திருட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து 6 மாத காலத்துக்குள் குற்ற பத்திரிகையை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளனர்.