கோவிட் -19 நோய் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைந்து வரும் சூழலில் ஊரடங்கில் தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் குறைந்த எண்ணிக்கையிலான ரயில்கள் தற்போது இயக்கப்பட்டு வந்தாலும், வழக்கமான ரயில் போக்குவரத்து எப்போது துவங்கும் என்பது பொது மக்கள் இடையே பெருத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் வழக்கமான ரயில் போக்குவரத்து மீண்டும் தொடங்குவதற்கான தேதி என்று ஒரு தேதியை குறிப்பிட்டு கூறுவது கடினம் என ரயில்வே வாரியத் தலைவர் வி கே யாதவ் வெள்ளியன்று நடைபெற்ற ஒரு செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார். இந்த ஆண்டில் மட்டும் பயணிகள் ரயில் போக்குவரத்து மூலம் கிடைக்கும் வருவாயில் இதுவரை 87 சதவிகிதம் சரிவை இந்திய ரயில்வே கண்டுள்ளது. பொது மேலாளர்கள் மாநில அரசுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். எந்தெந்த இடங்களில் தொடங்க கூறுகிறார்களோ அங்கே வழக்கமான ரயில் சேவைகளை துவங்குவோம், என அவர் மேலும் தெரிவித்தார்.
நடப்பு நிதியாண்டில் பயணிகள் போக்குவரத்து மூலம் இந்திய ரயில்வே ரூபாய் 4,600 கோடியை வருவாயாக ஈட்டியுள்ளது. மேலும் இந்த வருட இறுதிக்குள் இந்த வருவாய் ரூபாய் 15,000 கோடியாக அதிகரிக்கும். ஆனால் கடந்த நிதியாண்டில் பயணிகள் போக்குவரத்து மூலம் மட்டும் இந்திய ரயில்வே ரூபாய் 53,000 கோடியை வருவாயாக ஈட்டியது. எனவே இந்த ஆண்டை பொருத்தமட்டில் இது 87 சதவிகிதம் சரிவு, என யாதவ் குறிப்பிட்டார்.
தற்போது இயக்கப்படும் ரயில்களில் கூட சராசரியாக 30 முதல் 40 சதவிகிதம் இடங்கள் தான் நிறம்புகின்றன. இது கொரோனா தொற்று குறித்தான அச்சம் மக்கள் மத்தியில் இன்னும் இருக்கிறது என்பதையே காட்டுகிறது என்றார்.
தற்போதைய நிலையில் இந்திய ரயில்வே 1,089 சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது. கொல்கத்தா மெட்ரோ 60 சதவிகித ரயில்களையும், மும்பை புறநகர் ரயில் சேவை 88 சதவிகித ரயில்களையும், சென்னை புறநகர் ரயில் சேவை 50 சதவிகிதம் ரயில்களையும் இயக்கி வருகிறது என்றும் ரயில்வே வாரியத் தலைவர் யாதவ் தெரிவித்தார்.