வரும் ஜனவரி 1, 2021 முதல் அனைத்து வாகனங்களுக்கும் பாஸ்ட் டேக் கட்டாயம் என்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்க சாவடிகளில் மின்னணு முறையில் பணம் செலுத்துவதற்காக பாஸ்ட் டேக் முறை 2016 முதல் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. சுங்க கட்டணம் மின்னணு முறையில் செலுத்தப்படுவதால் சுங்கசாவடிகளில் வாகனங்கள் காத்து இருக்க வேண்டியதில்லை.
பாஸ்ட் டேக் முறை ஏற்கனவே அமலுக்கு வந்துவிட்டாலும், நேரடியாக கட்டணம் செலுத்தி செல்வதும் தற்போது சுங்க சாவடிகளில் அனுமதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் காணொளி மூலமாக ஒரு நிக்ழ்ச்சியில் பேசிய மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்காரி வரும் ஜனவரி 1, 2021 முதல் பாஸ்ட் டேக் முறை கட்டாயமாக்கப்படுவதாக தெரிவித்தார். மேலும் பாஸ்ட் டேக் முறையை பயன்படுத்துவதால் வாகன எரிபொருளும் பயணர்களின் நேரமும் கணிசமாக சேமிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
2018 வரை சுமார் 34 லட்சம் பாஸ்ட் டேக்குகள் விநியோகிக்கப்பட்டுள்ளது. மத்திய மோட்டார் வாகன விதிகள் 1989ன் கீழ் டிசம்பர் 1, 2017 க்கு பிறகு பதிவு செய்யப்படும் 4 சக்கர வாகனங்களுக்கு பாஸ்ட் டேக் கட்டாயம். மேலும் போக்குவரத்து வாகனங்கள் தகுதி சான்றிதழ் புதுப்பிக்க வேண்டுமானால் அந்த வாகனங்களில் பாஸ்ட் டேக் அவசியம் இருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. புதிய மூன்றாம் தரப்பு காப்பீடு எடுப்பதற்கும் பாஸ்ட் டேக் அவசியம் என்பது வரும் ஏப்ரல் 1, 2021 முதல் கட்டாயமாக்கப்படுகிறது.
சுங்க சாவடிகளில் நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் பாஸ்ட் டேக்’ஐ பெற்றுக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது