மத்திய அரசு புதிதாக கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் டெல்லியில் விவசாயிகள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில் போராடும் விவசாயிகளுடன் மத்திய அரசு இன்று பேச்சுவார்த்தை நடத்துகிறது.
கடந்த ஒரு மாதமாகவே டெல்லியின் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் தீவிரமாக போராடிவருகின்றனர். அந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் போராடும் விவசாயிகள் சங்க நிர்வாகிகளோடு மத்திய அரசு இதுவரை 5 முறை பேச்சுவார்த்தை நடத்தியது. இருந்தும் போராட்டத்தில் தீர்வு எட்டப்படவில்லை. சட்டங்களை முழுதாக ரத்துசெய்ய வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கையாக இருக்கிறது.
இந்நிலையில் மத்திய அரசின் அழைப்பை ஏற்று டெல்லி விஞ்ஞான்பவனில் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் 40 விவசாயிகள் சங்கத்தின் தலைவர்கள் பங்கேற்றனர். இதில் விவசாயிகள் தரப்பில் 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்வதால் ஏற்படும் சாதக, பாதகங்கள், குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்ட அங்கீகாரம் வழங்குவது ஆகியவைப் பற்றி மட்டுமே விவாதிக்கவேண்டும் என அரசிடம் கோரிக்கை வைத்திருந்தனர். இந்த பேச்சுவார்த்தையில் மின்சார அவசர சட்ட மசோதாவை நிறுத்திவைப்பது, வேளாண் கழிவுகளை எரிப்போருக்கு தண்டனை அளிக்கும் பிரிவில் இருந்து விலக்கு அளிப்பது ஆகியவற்றில் உடன்பாடு ஏற்பட்டது. மின்சார சட்ட மசோதாவால் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் ரத்து செய்யப்படும் என்னும் அச்சம் இருந்ததால் விவசாயிகள் அதனை எதிர்த்து போராடினர். இந்நிலையில் அந்த அச்சத்தை போக்கும்வகையில் அரசு அதை ரத்துசெய்துள்ளது.
அதேநேரத்தில் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்ட அங்கீகாரம் வழங்குவது, புதிய வேளாண் சட்டங்களை ரத்துசெய்வது ஆகியவைக் குறித்து வரும் 4 ஆம் தேதி பேச்சுவார்த்தை நடக்கிறது.