மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை ரத்துசெய்யக்கேட்டு தலைநகர் டெல்லியில் விவசாயிகள் தீவிரமாக போராடி வருகின்றனர். ‘கிசான் ஏக்தா மோர்ச்சா’ என்னும் பெயரில் அவர்கள் பேஸ்புக்கிலும் பக்கம் வைத்து இயங்கினர். இந்த பக்கம் திடீரென முடங்கியது. அதேநேரம் மூன்று மணிநேரத்தில் மீண்டும் ஆக்டிவ் செய்யப்பட்டது. விவசாயிகளின் போராட்டத்தை நசுக்குவதுபோல் இந்த பக்கத்தை திடீரென முடக்கிவிட்டதாக நாடு முழுவதும் நெட்டிசன்கள் பதிவிட்டனர்.
இந்நிலையில் விவசாயிகளின் பேஸ்புக் பக்கம் நீக்கப்பட்டு, மீண்டு வந்தது குறித்து பேஸ்புக் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. அதில், ‘’விவசாயிகளின் கிசான் ஏக்தா மோர்ச்ச’ பக்கத்தில் திடீரென சந்தேகத்துக்கு இடமான பதிவுகள் அதிகமாக வந்தன. இதை தானியங்கி அமைப்பு கண்டுபிடித்ததையடுத்து சமூக தரநிர்ணயத்தை மீறுவதாகக் கூறி அந்த பக்கம் ஸ்பேம் என ஞாயிறுக்கிழமை முடக்கப்பட்டது. தொடர்ந்து உண்மைநிலை தெரியவந்ததும், மூன்று மணிநேரத்திற்குள்ளாகவே அந்தப்பக்கம் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. தானியங்கி சரிபார்ப்பு முறையால் விவசாயிகளின் பக்கம் மட்டுமே முடங்கியது. அதேநேரம் விவசாயிகளின் இன்ஸ்டாகிராம் பக்கத்துக்கு சேதம் எதுவும் இல்லை.’எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.