தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் அதன் மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சியில் நடைபெற்றது.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து அய்யாக்கண்ணு கூறியதாவது : வேளாண்மைத் தொழிலை பெருநிறுவனங்களின் வசம் ஒப்படைக்கும் நோக்கோடு கொண்டுவரப்பட்டுள்ள புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறக் கோரி புதுதில்லி எல்லைகளில் நூற்றுக் கணக்கான விவசாயிகள் போராடி வருகின்றனர்.
அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பாக 30 பேர் கொண்ட தற்கொலை படை தயார் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே இரண்டு முறை புது தில்லி செல்ல முயன்ற எங்களை காவல்துறையினர் தடுத்துவிட்டனர். எனவே நாங்கள் தில்லி செல்ல அனுமதிக்க கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளோம். அனுமதி கிடைத்தவுடன் எங்கள் தற்கொலை படையுடன் தில்லி சென்று தினம் ஒருவர் என்ற வகையில் தற்கொலை செய்து அரசின் கவனத்தை ஈர்க்க பாடுபடுவோம் என தெரிவித்தார்.