தமிழகத்தில் தேர்தல் ஜூரம் சூடுபிடித்துள்ளது. பிரதான கட்சியினர் அனைவருமே தங்கள் பரபரப்புரையைத் தொடங்கிவிட்டார்கள். எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பி.எஸ், மு.க.ஸ்டாலின், கனிமொழி, உதயநிதி என ஒவ்வொருவருமே தீவிர சுற்றுப்பயணத்தில் இருக்கின்றனர். மக்கள் நீதி மய்யத்தின் கமல் தனது பரப்புரையின் இடையிலேயே காலில் ஆப்ரேசன் செய்து ஓய்வில் இருக்கிறார்.
அதிமுக சார்பில் வெற்றி நடைபோடும் தமிழகமே என்னும் விளம்பரம் தீவிரமாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது. அதிமுகவில் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமியை அறிவித்து களம் கண்டு வருகின்றனர். அதை பாஜக முதலில் ஏற்கவில்லை. கூட்டணியில் கூடுதல் சீட் கேட்டும் பாஜக அழுத்தம் கொடுத்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் தான் சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் சசிகலா, வரும் 27 ஆம் தேதி விடுதலையாவார் என சிறைத்துறை அறிவித்துள்ளது. இதை சசிகலாவின் வக்கீல் ராஜா செந்தூர் பாண்டியன் உறுதி செய்துள்ளார்.
இது உறுதியான தகவலாக இப்போது கசிந்தாலும் முன்னதாகவே இது பேசப்பட்டு வந்தது தான். தகவல் பெறும் உரிமைச்சட்டத்தில் 27 ஆம் தேதி சசிகலா விடுதலையாவார் என்று முன்னரே தகவல் கசிந்திருந்தது. விடுதலையாகும் சசிகலாவை 1000 கார்களில் சென்று பிரமாண்டமாக வரவேற்பது என முடிவு செய்துள்ளனர். கர்நாடாக எல்லையான ஓசூரில் இருந்து சென்னை வரை ஒவ்வொரு பகுதியிலும் பிரத்யேக வரவேற்பு கொடுக்கவும் முடிவு செய்துள்ளனர். சசிகலா வெளியில் வந்தால் பல பழப்பங்கள் வரும். அதிமுக மீண்டும் மிகவும் சிக்கலை சந்திக்கும் எனவும் கூறப்படுகிறது. ஆனால் முதல்வர் பழனிச்சாமியோ அப்படி எதுவும் நடக்காது என்றே கூறிவருகிறார்.
சசிகலா விடுதலையாகும் அதே 27 ஆம் தேதியை ஊடகத்தின் கவனத்தை வேறுதிசையில் திருப்ப முடிவெடுத்து இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. சசிகலா ரிலீஸாகும் அதே 27 ஆம் தேதி சென்னை மெரீனா கடற்கரையில் ஜெயலலிதாவின் நினைவிடத்தை எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைக்கிறார். அன்றைய காலை நாளிதழ்களில் இதுவே முழுப்பக்க விளம்பரமாகவும், மறுநாள் தலைப்புச் செய்தியாகவும் இருக்க வேண்டும் என விரும்புகிறாராம் எடப்பாடி பழனிச்சாமி.
ஆனாலும் எடப்பாடி பழனிச்சாமியின் இந்த வியூகம் பலிக்குமா? என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.