தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று ராமநாதபுரத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். அப்போது அவர் பரமக்குடியில் மக்களுடன் கலந்துரையாடினார். அதில் அவர் பேசுகையில், “தை பொங்கலுக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு, 2, 500 வழங்கும் திட்டத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் மூலம் வழக்கு தொடுக்கப்பட்டது. ஆனால் அது நிராகரிக்கப்பட்டுள்ளது. எனவே ஸ்டாலினை மறந்து விடுங்கள். தைப் பொங்கலை சிறப்பாக கொண்டாடுங்கள்” என்றார்.
பின்னர் ராமநாதபுரத்தில் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, “ஸ்டாலினின் கனவு கானல் நீராகவே இருக்கும். தி.மு.க-வில் ஸ்டாலின் குடும்பத்தினர்கள் மட்டுமே மேலேவர முடியும். கட்சிக்காக உழைப்பவர்கள், விசுவாசிகள் மேலே வர முடியாது. நம் கட்சியில் முதல்வர், அமைச்சர்களை எளிதாக பார்க்க முடியும். ஸ்டாலினை பெரிய தலைவர்கள், நிர்வாகிகள் கூட எளிதாக பார்க்க முடியாது. வரும் தேர்தலில் நாம் வியூகம் அமைத்து செயல்பட வேண்டும்” என்றார்