திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகிலுள்ள தண்டுக்காரன் பாளையம் பகுதியில் உள்ள குப்பை பிரித்து எடுக்கும் கிடங்கில் மயங்கிய நிலையில் ஒரு 6 வயது பெண் குழ்ந்தை கிடந்துள்ளது. உடனடியாக அப்பகுதி மக்கள் குழந்தையை மீட்டு அவிநாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு சேவூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். குழ்ந்தைக்கு சுய நினைவு திரும்பாத நிலையில் மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கும் பிறகு அங்கிருந்து கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகிறது.
இதற்கிடையில் பெண் குழ்ந்தை கண்டெடுக்கப்பட்ட குப்பை கிடங்கின் அருகில் பெண் ஒருவர் சுற்றி திரிந்துள்ளார். மேலும் அருகில் உள்ள சாலையில் இரவு தனியாக நின்று திருப்பூரிலிருந்து சத்தியமங்கலம் செல்லும் பேருந்தை கைகாட்டி நிறுத்த முயன்றுள்ளார். பேருந்து நிற்காமல் செல்லவே அந்த பகுதியில் சுற்றி திரிந்துள்ளார்.
இது குறித்து தகவலறிந்த சேவூர் காவல்துறையினர் அந்த பெண்ணை மீட்டு விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அந்த பெண் குப்பைகிடங்கில் கிடந்த குழந்தையின் தாய் சைலஜா (39) என்று தெரியவந்துள்ளது. மருத்துவரான சைலஜா விவாகரத்தானவர் என்றும் தற்போது பெங்களூருவில் மருத்துவமனை வைத்து நடத்தி வருவதாகவும் காவல்துறையினரிடன் தெரிவித்துள்ளார். அவர் மிகுந்த மன அழுத்தத்துடன் காணப்பட்டதால் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். குழந்தையை ஏன் குப்பை கிடங்கில் விட்டு சென்றார், எதற்காக அவிநாசி வந்தார் போன்ற விவரங்கள் அறிய காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.