தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியும், திமுகவும் ஒரே கூட்டணியில் அங்கம் வகிக்கின்றன. புதுச்சேரி மாநிலத்தில் காங்கிரஸ் கூட்டணியில் இருந்த திமுக சமீபகாலமாக தனித்து களம் கண்டுவருகிறது. அங்கு உள்ள அனைத்து சட்டசபைத் தொகுதிகளிலும் திமுக தனித்தே தேர்தலை சந்திக்கவும் திட்டமிட்டு வருகிறது.

புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியின் கோஷ்டி பூசல்களை காரணம்காட்டி கூட்டணியில் இருந்து கழற்றிவிட திமுக முடிவு செய்துள்ளது. இது தொடர்பான ஆலோசனை கூட்டம் ஜெகத்ரட்சகன் தலைமையில் புதுச்சேரியில் நடைபெற்றது. இதற்கான விரிவான ஏற்பாடுகளை திமுகவினர் செய்து இருந்தனர். இந்தக் கூட்டத்தை புஷ்வாணம் ஆக்கும் நோக்கத்தில் அதேநாளில் புதுவை மாநில சட்டபேரவையைக் கூட்டினார் முதல்வர் நாராயணாசாமி. ஆனாலும் திட்டமிட்டபடி திமுக கூட்டம் நடந்தது.
இந்தக்கூட்டத்தில் பேசிய பலரும், புதுவை முதல்வர் நாராயணசாமி மாநிலத்தின் வளர்ச்சியில் கவனம் செலுத்தவில்லை. துணை நிலை ஆளுநர் கிரண்பேடியுடன் சண்டை போட்டே பெரும்பகுதி நேரத்தை விரயம் செய்துவிட்டார். என்றெல்லாம் சாடினார்கள். கூடவே திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெகத்ரட்சகனை முதல்வர் வேட்பாளராகவும் அறிவித்தனர். கடைசியில் மைக் பிடித்த ஜெகத்ரட்சகன், ‘ஸ்டாலின் புதுவை மாநிலத்தில் முழு பொறுப்பையும் என்னிடம் ஒப்படைத்துள்ளார். 30 சட்டசபை தொகுதியிலும் ஜெயிப்போம். இல்லாவிட்டால் மேடையிலேயே தூக்கு போட்டு சாவேன்.’’எனவும் ஆவேசமாகப் பேசினார். புதுவையில் நாராயணாமிக்கு அவரோடு கூட்டணியில் இருந்த திமுகவும் கணிசமான குடைசலைக் கொடுப்பார்கள் போல் இருக்கிறது.