மத்திய அரசு புதிதாக கொண்டுவந்திருக்கும் மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்யக்கேட்டு தலைநகர் டெல்லியில் விவசாயிகள் தீவிரமாக போராடி வருகின்றனர். டெல்லி முற்றுகை போராட்டத்தால் திணறிய டெல்லிவாசிகள் சிலர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கும் தாக்கல் செய்தனர். இந்த வழக்கின் மீதான விசாரணையின் போது உச்சநீதிமன்ற நீதிபதிகள் விவசாயிகளுக்கு போராடும் உரிமை இருக்கிறது. மத்திய அரசு வேளாண் சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என சொல்லுமா? என்றெல்லாம் கேள்விகளால் துளைத்து எடுத்தனர்.
இன்னொரு புறத்தில் பிரதமர் நரேந்திரமோடி விவசாயிகள் போராட்டத்துக்கு எதிர்கட்சிகள் தூண்டிவிடுவதுதான் காரணம் எனச் சொன்னார். இந்நிலையில் வேளாண் சட்டங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு வரும்மாறு போராடும் விவசாயிகளுக்கு மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளது. ஆனால் சட்டங்கள் தொடர்பான உறுதியான தீர்வை அளித்தால் மட்டுமே மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என விவசாயிகள் தீர்க்கமாக தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக போராடும் விவசாயிகள் கூறுகையில், ‘மத்திய அரசு சார்பில் எங்களுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் புதிதாக எதுவும் இல்லை. ஏற்கனவே அளித்த பரிந்துரைகள் குறித்து ஆலோசித்து பேச்சுவார்த்தை நடத்த புதிய தேதியை அறிவிக்கும்படி மத்திய அரசு கடிதத்தில் கொடுத்துள்ளது. அதனால் அதை நிராகரித்துள்ளோம். முழுதாக வேளாண் சட்டங்களை ரத்துசெய்தால் மட்டுமே மத்திய அரசுடன் பேசத் தயாராக உள்ளோம்.’ என்கின்றனர். போராட்டத்தில் ஒருபகுதியாக டெல்லியில் பிரிவு, பிரிவாக விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டத்திலும் ஈடுபட்டுவருகின்றனர்.