தலைநகர் டில்லியில் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக்கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர். தொடர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் வேளாண் சங்கத் தலைவர்கள் இன்று ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் இருக்கின்றனர். மத்திய அரசு புதிதாக அமல்படுத்திய புதிய வேளாண் சட்டங்களுக்கு காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த சட்டங்களினால் விவசாயிகளின் நலன் பாதிக்கப்படும் எனவும் குரல் கொடுத்தனர். அரசியல் கட்சி மட்டத்தில் இருந்த இந்நிகழ்வு பஞ்சாப், ஹரியானா மாநிலங்களின் விவசாயிகளால் போராட்டமானது. அந்த மாநிலத்தின் விவசாயிகள் சங்கத் தலைவர்கள் கடந்த இருவாரங்களுக்கும் மேலாக இந்த வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக்கோரி தலைநகர் டெல்லியில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் அடுத்தகட்டமாக இன்று ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகள், அதேநேரம் தங்களின் வழக்கமான போராட்டங்களும் தொடரும் எனவும் அறிவித்துள்ளனர். இதனிடையே விவசாயிகளின் போராட்டம் குறித்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன், மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை இணையமைச்சர் சோம் பிரகாஷ் ஆகியோரும் ஆலோசனை நடத்தியுள்ளனர்.