தஞ்சாவூரைச் சேர்ந்த வைரசேகர் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், தமிழகத்தில் சாலைகள் மற்றும் பொது இடங்களில் தலைவர்களின் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. சில சிலைகள் அனுமதி பெறப்பட்டும், சில சிலைகள் அனுமதி இன்றியும் வைத்துள்ளனர். அந்த பிறந்தநாள், நினைவு நாட்களில் அரசியல் கட்சிகள், அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மாலை அணிவிப்பது போன்ற நிகழ்வுகளால் சாலைகளில் போக்குவரத்து பாதிக்கிறது.

எனவே தமிழகத்தில் அனுமதி இல்லாமல் நிறுவப்பட்டுள்ள சிலைகளை அகற்றவும், அனுமதி பெற்று வைக்கப்பட்டுள்ள சிலைகளின் அருகில் உள்ள ஏணிகளை அகற்றவும் அரசுக்கு உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. இதை விசாரித்த மதுரை ஐகோர்ட் கிளை, மாநிலம் முழுதும் பொது இடங்களிலும், வருவாய்த் துறைக்கு சொந்தமான இடங்களிலும் அரசியல் மற்றும் மத ரீதியான அடையாளங்களுடன் அனுமதியின்றி நிறுவப்பட்டுள்ள சிலைகள் மற்றும் கட்டுமானங்கள் அகற்றப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.