கரோனா வைரஸின் தாக்கம் உலகையே உலுக்கி எடுத்துவிட்டது. நம் இந்தியாவில் நோயில் தீவிரத்தைவிட அதனால் எழுந்த பொருளாதாரப் பாதிப்புகளே மிக அதிகம். கரோனாவைத் தொடர்ந்து பொதுமுடக்கம் அறிவிக்கப்பட லட்சக்கணக்காணோர் வேலை இழந்து உள்ளனர். இந்நிலையில் இந்தியாவில் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் கட்டாயப்படுத்தப்பட மாட்டார்கள் என்றும், சுயவிருப்பத்தின் அடிப்படையில் போட்டுக்கொள்ளலாம் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
மத்திய அரசின் சுகாதாரத்துறை இதுகுறித்து வெளியிட்டுள்ள தகவலில், ‘தடுப்பூசிகள் தொடர்பான ஆராய்ச்சிகள் பரிசோதனையில் உள்ளது. தடுப்பூசியின் பாதுகாப்புத்தன்மை உறுதிசெய்யப்பட்ட பின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும். மக்கள் நோய்க்கு எதிரான தடுப்பு ஆற்றலை பெறவும், நோயிலிருந்து பாதுகாத்துக்கொள்ளவும் தடுப்பூசி போடப்படவேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. இருப்பினும், மக்களின் சுயவிருப்பத்தின் அடிப்படையிலேயே தடுப்பூசி போடப்படும். சர்க்கரை, இரத்த அழுத்தம், கேன்சர் போன்ற நோயால் பாதிக்கப்பட்டோருக்கு தடுப்பூசி மிக அவசியம். இருமுறை இந்த தடுப்பூசியை 28 நாள் இடைவெளிகளில் செலுத்திக்கொள்ள வேண்டும்.
கரோனா தடுப்பூசி போட்ட இடத்தில் வலி, லேசான காய்ச்சல் போன்ற சில பக்கவிளைவுகள் ஏற்படலாம். அதையும் எதிர்கொள்ள மாநில அரசுகள் தயாராக உள்ளன. 50 வயதைக் கடந்தோருக்கும், களத்தில் கரோனா ஒழிப்பில் ஈடுபடுவோருக்கும் முன்னுரிமை கொடுத்து தடுப்பூசி போடப்படும். இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் சேர்ந்து பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவேக்ஸின் தடுப்பூசி மூன்றாம் கட்ட பரிசோதனையில் உள்ளது. அதை அவசரகாலப் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு அந்நிறுவனம் அனுமதி கேட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.