பிரட்டனில் தீவிரமாக பரவி வரும் மரபியல் மாற்றமடைந்த அதிதீவிர கரோனா வைரஸ் குறித்து தமிழக மக்கள் பயம் கொள்ள வேண்டாம் என்று மாநில சுகாதாரத்துறை செயலாளார் மரு ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
பிரட்டனிலிருந்து சென்னை வந்த விமான பயணிக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் சென்னை விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத்துறை செயலாளர் இன்று ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை செயலாளர், கடந்த பத்து நாட்களாக பிரட்டனிலிருந்து தமிழகம் வந்த அனைத்து நபர்களின் விபரங்களும் சேகரிக்கப்பட்டு வருகிறது. கடந்த 10 நாட்களில் பல்வேறு நாடுகளிலிருந்து பிரட்டன் வழியாக தமிழகம் வந்த சுமார் 1,088 பேரிடம் தனிமைப்படுத்திக் கொள்ள கேட்டுக் கொண்டுள்ளோம்.
பிரட்டனிலிருந்து தமிழகம் வந்த நபருக்கு கரோனா பாதிக்கப்பட்டுள்ளது பற்றி குறிப்பிடுகையில் அந்த நபர் பிரட்டனிலிருந்து புது தில்லி வந்து அங்கிருந்து சென்னை வந்துள்ளார். அவரின் சளி மாதிரிகள் பரிசோதனை முடிந்து வந்தப்பின்னரே மேற்கொண்டு விவரங்கள் தெரியவரும் என்றார்.
அரசின் கண்காணிப்பு தீவிரமாக உள்ளதால் புதிய வகை கரோனா குறித்து மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என்றும் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். முககவசம் அணிந்து அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் வெளியே செல்லுதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் மற்றும் பூட்டிய அறையில் கூட்டமாக இருப்பது போன்றவற்றை தவிர்த்தால் கரோனா பரவலில் இருந்து தற்காத்துக் கொள்ளலாம் என்று அவர் மேலும் தெரிவித்தார்