கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அருமனை வட்டார கிருஸ்துவ இயக்கம் என்ற அமைப்பு ஆண்டுதோறும் நடத்தும் கிருஸ்துமஸ் விழாக்களில் அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்பது வழக்கம். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் மு க ஸ்டாலின், கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி, புதுச்சேரி முதல்வர் நாராயண சாமி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இதற்கு முன்னர் நடைபெற்ற விழாக்களில் பங்கேற்றுள்ளனர். அந்த வகையில் இந்த வருடத்துக்கான விழா இன்று (22 டிசம்பர்) அருமனையில் நடைபெற உள்ளது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இவ்விழாவில் கலந்துக் கொண்டு சிறப்புரையாற்ற உள்ளார். முதல்வரின் வருகையையொட்டி அருமனை மற்றும் நாகர்கோவில் சுற்றுவட்டாரத்தில் பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விழா நடைபெறும் மைதானத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஏற்பாடுகளை தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். விழாவின் ஒரு பகுதியாக கிருஸ்துமஸ் விழா ஊர்வலமும் நடைபெறும்.
இந்நிலையில் நாகர்கோவில் வட்டார கிருஸ்துவ ஐக்கிய பேரவை என்ற அமைப்பின் சார்பில் நாகர்கோவில் கன்கார்டியா பள்ளி மைதானத்தில் நேற்று (21 டிசம்பர்) நடைபெற்ற கிருஸ்துமஸ் விழாவில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவரும் ஆர் கே நகர் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான டிடிவி தினகரன் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் தனது உரையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா கிருஸ்துவ மக்களின் காவலராக திகழ்ந்தார் என்று குறிப்பிட்டார்.
தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கிருஸ்துமஸ் விழாக்களில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் பங்கேற்பது குறிப்பிடத்தக்கது.