அதிமுகவில் யார் வேண்டுமானாலும் முதல்வர் வேட்பாளர் ஆகலாம். இதோ என் எதிரே இருக்கும் உங்களில் ஒருவர் கூட முதல்வர் ஆகலாம் என அதிமுக சார்பில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
சென்னை, ராயப்பேட்டையில் அதிமுகவின் முதல் தேர்தல் பரப்புரைக் கூட்டம் நடந்தது. இதில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழக அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்பட பலரும் கலந்து கொண்டனர். இந்த விழா மேடையில் கட்சியின் முக்கிய விஜபிக்களுக்காக 94 இருக்கைகள் போடப்பட்டு இருந்தது. இந்த மேடையில் பேசிய முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, ‘அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமிதான்’ என சொன்னார்.
இந்தக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில், ‘இந்தியாவிலேயே ஒரு தொண்டன் முதல்வராகக் கூடிய இயக்கம் அதிமுக தான். நாளை இதோ என் எதிரில் அமர்ந்திருக்கும் உங்களில் ஒருவர் கூட முதலமைச்சர் ஆகலாம். எம்.ஜி.ஆர் பெயரை யார் உச்சரித்தாலும் அதிமுகவை வீழ்த்த முடியாது. கடந்த தேர்தலிலும் கிராம சபைக் கூட்டம் நடத்தி பொதுமக்களிடம் திமுக மனுக்கள் வாங்கியது. அப்போது பெற்ற மனுக்கள் குப்பைத் தொட்டிக்குப் போய்விட்டது.’என்று பேசினார்.